Ravi Shastri Tamil News: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில், மூத்த வீரர் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் ஒருநாள் அணிக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ. ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்தும், விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும் முன்னதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு பிசிசிஐ தலைவைர் சவுரவ் கங்குலி பேட்டியளித்து இருந்தார்.
அதில், விராட் கோலியை டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று பிசிசிஐ அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும், ஒருநாள் கேப்டன்சி மாற்றம் குறித்து கோலியுடம் தனிப்பட்ட முறையில் தானே பேசியதாகவும், தேர்வாளர்களும் கோலியிடம் பேசியதாகவும் கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விராட் கோலி, “டி20 கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்று தன்னிடம் யாரும் ஒருபோதும் கூறவில்லை என்று தெரிவித்தார். மேலும், கங்குலி தெரிவித்துள்ள கருத்திற்கு முரண்பட்ட கருத்தையும் அவர் கூறியிருந்தார்.
இதனால் இதில் யார் கூறுவது உண்மையாக இருக்கும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் குழம்பினர். இந்த விஷயத்தில் கோலிக்கு ஒரு பிரிவினரும், கங்குலிக்கு ஒரு பிரினரும் ஆதாரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், கோலி - கங்குலி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலியை டி20 கேப்டன் பதவியில் இருந்து மாற்றம் செய்ததை "நல்ல தகவல்தொடர்புடன்" சிறப்பாகக் கையாண்டிருக்கலாம். இப்போது கோலி அவர் தரப்பு கருத்தை தெரிவித்துள்ளதால், கங்குலி தனது தரப்பு கருத்தை முன்வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இ-அட்டா (eAdda) நேர்காணலில் பேசிய ரவி சாஸ்திரி, “நான் பல ஆண்டுகளாக இந்த அமைப்பின் ஒரு அங்கமாக இருக்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த குழுவில் இருந்தேன். கோலி - கங்குலி குறித்து பொதுத்தளத்தில் விவாதம் எழுந்துள்ள நிலையில், அது நல்ல தகவல்தொடர்பு மூலம் மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம். விராட் தனது தரப்பைக் கூறியுள்ளார், அதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி வந்து தனது தரப்பைக் கூற வேண்டும் அல்லது என்ன நடந்தது என தெளிவுபடுத்த வேண்டும். அவ்வளவு தான்.
உண்மை என்ன என்பதுதான் கேள்வி. நீங்கள் உண்மையை அறிய விரும்புகிறீர்கள், அது உரையாடல் மற்றும் தகவல்தொடர்பு மூலம் மட்டுமே வர முடியும்.
ஒருத்தர் ஒரு பக்கம் உட்கார்ந்து ஏதோ சொல்லப் போறார். இன்னொருவர் மறுபுறம் அமர்ந்து ஏதோ சொல்லப் போகிறார். சில தெளிவு இருக்க வேண்டும் மற்றும் இரு தரப்பிலிருந்தும் உரையாடல் தேவை, ஒரு பக்க உரையாடல் அல்ல.
கோலி மற்றும் கங்குலி இடையே "உண்மையில் என்ன நடந்தது" என்பதை அறியும் வரை இந்த பிரச்சினையில் ஒரு கருத்தை உருவாக்குவது சரியாக இருக்காது." என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.