ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபாவில் ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. மழையால் பாதிப்புக்கு உள்ளான இந்த ஆட்டம் இன்று டிராவில் முடிந்தது.
இந்த நிலையில், இந்த போட்டி டிராவில் முடிந்த உடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில், அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திய 500 விக்கெட் வீடியோ ரசிகர் ஒருவரால் எக்ஸ் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“