Ravichandran Ashwin | India Vs England 3rd Test: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், விசாகப்பட்டினத்தில் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று வியாழக்கிழமை (பிப்.15) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 455 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் 131 ரன்களையும், ஜடேஜா 112 ரன்களையும், சர்ஃபராஸ் கான் 62 ரன்களையும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகள், ரெஹன் அகமது 2 விக்கெட்டுகள், ஆண்டர்சன் , ஹார்ட்லி, ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தற்போது இங்கிலாந்து அணி அதன் முதல் இனிங்சில் விளையாடி வருகிறது.
இங்கிலத்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஜோடி களமிறங்கிய நிலையில், இதில் ஜாக் கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500-வது விக்கெட்டை கைப்பற்றி அபார சாதனை படைத்துள்ளார்.
அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் மொத்தம் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். மேலும் இந்தியா தரப்பில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பவுலர் என்ற வரலாறு படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்:
முத்தையா முரளிதரன் - 800 விக்கெட்டுகள்
சேன் வார்னே - 708 விக்கெட்டுகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன் - 690 விக்கெட்டுகள்
அனில் கும்ப்ளே - 619 விக்கெட்டுகள்
ஸ்டூவர் பிராட்- 604 விக்கெட்டுகள்
க்ளென் மெக்ராத் - 563 விக்கெட்டுகள்
கோர்ட்னி வால்ஷ் - 519 விக்கெட்டுகள்
நாதன் லயன் - 517 விக்கெட்டுகள்
அஸ்வின் - 500 விக்கெட்டுகள்
/indian-express-tamil/media/post_attachments/bc3004b2-eef.jpg)
அஸ்வின் பல ஜாம்பவான்களை முந்தி சாதனை பட்டியல்களிலும் இடம்பிடித்துள்ளார். குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஜாம்பவான்கள் அனில் கும்ப்ளே, ஷேன் வார்னே ஆகியோரை முந்தி 2-வது இடம்பிடித்துள்ளார்.
1.முத்தையா முரளிதரன் - 87 போட்டிகள்
2. அஸ்வின் -98 போட்டிகள்
3.அனில் கும்ப்ளே - 105 போட்டிகள்
4.ஷேன் வார்னே - 108 போட்டிகள்
5.கிளென் மெக்ராத் - 110 போட்டிகள்
மேலும், அஸ்வின் குறைந்த பந்துகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2-வது இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
1. கிளென் மெக்ராத்- 25,528 பந்துகள்
2. அஸ்வின் - 25,714 பந்துகள்
3. ஜேம்ஸ் ஆண்டர்சன் - 28,150 பந்துகள்
4. ஸ்டூவர்ட் பிராட் - 28,430 பந்துகள்
5. கோர்ட்னி வால்ஷ் - 28,833 பந்துகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“