இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்த 2010 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அடியெடுத்து வைத்த அவர் 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளையும், 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் அசத்தி இருக்கிறார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 8 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்ஸ்மேனாகவும் அதிரடி காட்டிய அவர், டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 151 இன்னிங்சில் 3,503 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 1 அரைசதத்துடன் 707 ரன்களும், டி20 போட்டிகளில் 184 ரன்களும் எடுத்துள்ளார்.
அவர் அண்மையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐ.பி.எல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த சீசனில், ஐ.பி.எல் தொடரில் தனது பயணத்தை தொடங்கிய அதே சி.எஸ்.கே அணியில் மீண்டும் இணைந்திருக்கிறார். இத்தொடரில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், தற்போது சொந்த அணிக்கு வலு சேர்க்க இருக்கிறார்.
/indian-express-tamil/media/post_attachments/838af6dc-7d0.jpg)
இந்த நிலையில், அஸ்வினை பெருமைப்படுத்தும் வகையில், அவர் வசிக்கும் தெருவுக்கு அவரது பெயரையே வைக்க முடிவு செய்துள்ளது சென்னை மாநகராட்சி. அதன்படி, மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணபுரம் முதல் தெருவுக்கு அஸ்வின் பெயர் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர் சூட்டும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சர்வதே கிரிக்கெட் அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த அஸ்வினை கவுரவிக்கும் வகையில் அவர் வசிக்கும் தெருவுக்கு அவரின் பெயரை வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆர்யா கவுடா சாலைக்கோ அல்லது அஸ்வின் வசிக்கும் ராமகிருஷ்ணபுரம் முதல் தெருவுக்கோ அவரது பெயர் வைக்க வேண்டும் என கேரம் பால் ஈவென்ட் அண்ட் மார்க்கெட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (அஸ்வினுக்கு சொந்தமான நிறுவனம்) சார்பில் சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த சென்னை மாநகராட்சி, ராமகிருஷ்ணபுரம் முதல் தெருவுக்கு அஸ்வின் பெயர் சூட்ட முடிவு எடுத்திருக்கிறது.
Ravichandran Ashwin | Indian Cricket Team | Chennai Super Kings