இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று புதன்கிழமை திடீரென அறிவித்தார். இதன் மூலம் அவரது 14 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவருக்கு இன்னாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து புகழாரம் சூட்டி வருகிறார்கள்.
அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அங்கம் வகித்தார். இந்த தொடரில் 3 போட்டிகள் முடிந்து தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. பிரிஸ்பேன் போட்டி டிராவில் முடிந்த சூழலில் அஸ்வின் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக இன்று காலை சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து காரில் வீட்டிற்கு சென்ற அஸ்வினை அவரது தந்தை, தாய் மற்றும் குடும்பத்தினர் கட்டியணைத்து, முத்தமிட்டு வரவேற்றனர். அவரது வீட்டில் மேள தாளங்களுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அஸ்வின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இரவு தூங்கும்போது விளையாடிய போட்டிகளில் விக்கெட் வீழ்த்தியது, ரன்கள் அடித்தது எல்லாம் ஞாபகம் வரும்; ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அப்படி ஒன்று ஞாபகம் வரவில்லை. அதுவே ஒரு தெளிவான அறிகுறி; நாம் இனி அடுத்த பாதைக்கு செல்ல வேண்டும் என்பது. ஓய்வு அறிவித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான்.
இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்த பயணத்தை இனி தொடங்க வேண்டும். இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும்; சும்மா இருப்பது கடினம்தான். கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும். அடுத்த பயணத்தை இனிதாக தொடங்க வேன்டும்.
நான் சி.எஸ்.கே-க்காக விளையாடப் போகிறேன். என்னால் முடிந்தவரை விளையாட முயற்சித்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்" என்று அவர் கூறினார்.
HOME TOWN HERO IS BACK. 🇮🇳
— Johns. (@CricCrazyJohns) December 19, 2024
- A Grand welcome for Ravichandran Ashwin at his home. 🤍 pic.twitter.com/WNGywMr4Sj
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.