Ravichandran Ashwin - MS Dhoni Tamil News: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பிடித்து இருந்தார். ஆனால், ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அஸ்வின் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்த விவாதம் போட்டி தொடங்கும் முன்பும், இந்தியாவின் தோல்விக்கு பிறகும் கடுமையாக இருந்தது. சமூக வலைதளங்களில் பலரும் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர். இதேபோல், முன்னாள் வீரர்களும் இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக சாடி இருந்தனர்.
தற்போது, அஸ்வின் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடந்தும் 7வது டி.என்.பி.எல் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையிலான அணி தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், அஸ்வின் தனது யூடியூப் சேனலில் ஐசிசி கோப்பைக்கான தேடலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மற்றொரு வாய்ப்பை இழந்ததற்காக இந்திய அணியை இலக்காகக் கொண்ட சமூக ஊடகத்தில் ரசிகர்கள் ஆற்றிய எதிர்வினைகளைப் பற்றி பேசினார். மேலும், ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை 3 ஐசிசி கோப்பை வெற்றிகளுக்கு அழைத்துச் சென்ற தோனியைப் பற்றிய குறிப்பிட்டு இருந்தனர். அதற்கும் பதிலளித்த அஸ்வின் தோனியின் வெற்றிக்குக் காரணம், தேர்வு செய்யப்பட்ட அணியில் உள்ள வீரர்களுக்கு அவர் அளித்த பாதுகாப்பு உணர்வுதான் என்றும் கூறி விளக்கியுள்ளார்.
“இந்தியாவில் நாம் 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்று ஒரு கொந்தளிப்பு இருப்பது புரிந்துகொள்ளத்தக்கது. ரசிகர்களுடன் நான் அனுதாபப்படுகிறேன். ஆனால் இந்த வீரரை நீக்கிவிட்டு அந்த வீரரை சேர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் எதிர்வினை ஆற்றப்படுகிறது. ஆனால் ஒரு வீரரின் தரம் ஒரே இரவில் மாறாது. எம்.எஸ். தோனியின் தலைமைத்துவம் பற்றி நம்மில் பலர் பேசுகிறோம். அவர் என்ன செய்தார்? விஷயங்களை அவர் மிகவும் எளிமையாக வைத்திருந்தார். அவரது கேப்டன்சியில் நானும் விளையாடிய இடத்தில், அவர் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுப்பார். அதே அணி 15 வீரர்கள் மற்றும் ஆடும் லெவன் அணி தான் ஆண்டு முழுவதும் விளையாடும். அந்த பாதுகாப்பு உணர்வு ஒரு வீரருக்கு மிகவும் அவசியம்,” என்று அஸ்வின் கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் அஸ்வின் நமது இதழுக்கு அளித்த பேட்டியில் "நிறைய பேர் என்னை அதிகம் சிந்திப்பவன் என்று சொல்லி அவதூறு பரப்பினார்கள். தனக்கு இரண்டு கேம்களில் மட்டுமே கிடைக்கும் என்பதை அறிந்த ஒரு நபர் அதிர்ச்சியடைந்து, கண்டிப்பாக அதுபற்றி அதிகமாகச் சிந்திப்பார். ஏனெனில் அது தான் எனது வேலை. அதை (அதிக சிந்திப்பவன் என்ற முத்திரை) எனக்கு எதிராக செய்லபட பயன்படுத்திக் கொண்டனர், இல்லையா?. நான் சொன்னது போல், அணியில் கேப்டன்சி (தலைமைத்துவம்) என்ற கேள்வி என் வழியில் வரும் போதும், வெளிநாட்டில் இந்தியா சுற்றுப்பயணம் செய்யும் போதும், பேப்பரில் எனது பெயர் முதல் பெயராக இடம் பிடிக்காது என்று சிலர் எல்லா நேரங்களிலும் கூறியிருக்கிறார்கள்.
நான் முன்பை விட இப்போது மிகவும் கூலாக இருக்கிறேன். நான் எப்போதும் இருந்ததை விட மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். இன்று இங்கு அமர்ந்திருக்கும் போது, அது என்னை மனதளவில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். ஆனால் அந்த வழியாக வந்து ஒரு புதிய என்னைக் கண்டுபிடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடியபோது, உங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்தனர். இப்போது, அவர்கள் சக ஊழியர்களாகி விட்டார்கள். ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. ஏனென்றால் இங்கே உள்ளவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ளவும், உங்கள் வலது அல்லது இடது பக்கம் அமர்ந்திருக்கும் மற்றொரு நபரை விட முன்னேறவும் பார்க்கிறார்கள். எனவே, ‘ஓகே பாஸ் நீங்கள் அடுத்த என்ன போகிறீர்கள்’ என்று உங்களிடம் கேட்க யாருக்கும் நேரம் இல்லை?” என்று கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.