இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், 4வது ஆட்டத்தில் தமிழக வீரர் அஸ்வீன் மீண்டும் விளையாடுவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.இதையடுத்து, அஸ்வின் அணியில் இணைந்ததால், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ள நிலையில், தற்போது, 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். ரவிச்சந்திரன் மொத்தம் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது குடும்ப அவசரநிலை காரணமாக, அவர் 3-ம் நாள் ஆட்டத்தின்போது, இந்திய அணியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் இனி எந்தப் பங்கையும் வகிக்க மாட்டார் என்பதை பி.சி.சி.ஐ உறுதிப்படுத்தியது. இதையடுத்து, அஸ்வின் அவருடைய குடும்ப உறுப்பினரின் மருத்துவ அவசரநிலை காரணமாக சென்னை திரும்பினார்.
அஸ்வின் குடும்ப மருத்துவ அவசர நிலை காரணமாக, அணியில் இருந்து விலகுவதாகக் கூறியிருந்தாலும், இது அவருடைய ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதனிடையே, அஸ்வின் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் ராஜ்கோட் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 4வது நாள் ஆட்டத்தில், தமிழக வீரர் அஸ்வீன் மீண்டும் விளையாடுவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், 4வது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“