இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரராக ரவீந்திர ஜடேஜா ஜொலித்து வருகிறார். தற்போது அவர் வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் களமாடி விளையாடி வருகிறார். இதில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் அவர் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் மற்றும் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் என மொத்தமாக 5 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Ravindra Jadeja becomes second fastest to the 300 Wickets/3000 Runs grand double, behind Ian Botham
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வரும் ஜடேஜா, 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மற்ற வீரர்கள் யாரும் சாதிக்காத சாதனையை அண்மையில் பதிவு செய்தார். அவர் டெஸ்ட் போட்டியில் 2000 ரன்களுக்கும் மேல் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த நிலையில், ஜடேஜா தற்போது கான்பூரில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கலீத் அகமது-வின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த மைல்கல் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் என கிராண்ட் டபுள் சாதனையை எட்டிய வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவர் உட்பட 10 வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை எட்டியுள்ளனர். அந்த வகையில், 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் என்கிற சாதனையைப் படைத்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையும் ஜடேஜா பெற்றுள்ளார்.
சர்வதேச தரவரிசையில் ஜடேஜா இரண்டாவது இடத்தில் உள்ளார், இங்கிலாந்து ஜாம்பவான் இயன் போத்தம் நம்பர் 1 இடத்தில் அமர்ந்துள்ளார். அவர் 72 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார், ஜடேஜா தனது 73வது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறார்.
300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 7வது இந்திய பந்துவீச்சாளர் ஜடேஜா ஆவார். அதற்காக அவர் 17,428 பந்துகளை எடுத்துக்கொண்டார். அதேநேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 15,636 பந்துகளில் எடுத்துக்கொண்டு இந்திய அணிக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
அனில் கும்ப்ளே (619), ஆர் அஷ்வின் (524), கபில் தேவ் (434), ஹர்பஜன் சிங் (417), இஷாந்த் ஷர்மா (311), ஜாகீர் கான் (311) ஆகியோர் 300 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் ஆவார்.
மேலும், ஜடேஜா 300 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டிய முதல் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது ஒரு மகத்தான சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.