ஆசைத்தம்பி
நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், அக்சர் படேலுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மீண்டும் ஒருநாளுக்கான இந்திய அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார். 2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோற்ற பிறகு, ஜடேஜாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவேயில்லை. குறிப்பாக, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சுத்தமாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜாவுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சுமார் 480 நாட்களுக்குப் பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைத்தது. அதை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ஜடேஜா, பத்து ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டி முடிந்த பிறகு, நிரூபர்களுக்கு பேட்டியளித்த ரவீந்திர ஜடேஜா, "நான் அணிக்கு திரும்பிய இந்த தருணம் என்னால் மறக்கவே முடியாது. எப்போது இதனை நினைவில் வைத்திருப்பேன், ஏனென்றால், 480 நாட்களுக்குப் பின் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறேன். இவ்வளவு லாங் கேப் இதற்கு முன் ஏற்பட்டதில்லை.
என்னைப் பொருத்தவரை இனி நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை. என்னுடைய திறமை என்ன என்று எனக்கு நன்றாக தெரியும். தொடர்ந்து, அதனை மேம்படுத்தி வருகிறேன். எனக்கு நான் தான் சவால். உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. அதற்கு முன்னதாக நாம் பல போட்டிகளில் விளையாட இருக்கிறோம். என்னுடைய நோக்கம் எல்லாம், வாய்ப்பு கிடைக்கும் போது, சிறப்பாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதே.
வெளிநாடுகளில் இதற்கு முன் நடந்த டெஸ்ட் தொடர்களில் எனக்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது தீர்மானித்தேன், வாய்ப்பு கிடைக்கும் போது சாதிக்க வேண்டும் என்று. எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக்கொண்டேன். என்னுடைய விளையாட்டையும் என்னால் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
ஸ்லோ ஆடுகளத்தில் நாம் கடினமாக முயற்சி எடுத்து பந்துவீச வேண்டும். ஆனால், இயல்பான ஆடுகளத்தில் தரையில் பந்து பட்டவுடன் பேட்ஸ்மேனை நோக்கி வேகமாகச் செல்லும், பேட்ஸ்மேனுக்கு செல்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளாது. ஆனால், மந்தமான ஆடுகளத்தில் பந்துவீசுவது நம்முடைய திறமையின்அடிப்படையில் இருக்கிறது. துபாய் ஆடுகளம் மந்தமான ஆடுகளமாகும். நான் விஜய் ஹசாரே கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தேன். திடீரென அழைப்பு வந்து, துபாய் செல் என்றார்கள். இந்த அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை.
இந்தியா பாகிஸ்தான் போட்டியோ அல்லது இந்தியாவுடன் எந்த அணி மோதினாலும் இந்தியாவுக்காக விளையாடுவது பெருமைதான். ஆனால், இந்தியா -பாகிஸ்தான் போட்டி என்றாலே அனைவருக்கும் உற்சாகம் பிறந்துவிடும்" என்றார்.
ரவீந்திர ஜடேஜாவை பொறுத்தவரை, அவர் மனது வைத்துவிட்டால் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார். ஆனால், அதற்கு அவர் முதலில் மனது வைக்க வேண்டும். கடந்த ஆண்டு, நம்பர்.1 டெஸ்ட் பவுலர் மற்றும் நம்பர்.1 டெஸ்ட் ஆல் ரவுண்டர் எனும் பெயரை ஜடேஜா பெற்றிருந்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன போது, அவரது முகத்தில் தெரிந்த அந்த வெறி, இன்றும் தொடர்கிறதா என்றால், ஆம் என்று சொல்லலாம். ஒவ்வொரு முறையும், பந்துவீசிய பின், தனது தீர்க்கமான பார்வையால், பேட்ஸ்மேனை அவர் பார்க்கும் விதமே அதற்கு சாட்சி.
தனது பவுலிங் அடிக்கப்பட்டாலும் சரி, விக்கெட் வீழ்ந்தாலும் சரி அவரின் நிதானம் தவறாத நிலைப்பாடே இன்று அவர் இந்த உயரம் தொட்டிருப்பதற்கான காரணம்.
குறிப்பாக, 2012-13-ல் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஆஸி., கேப்டன் மைக்கேல் கிளார்க்கை ஆறு இன்னிங்ஸில் ஐந்து முறை காலி செய்தார் ஜடேஜா. அந்தத் தொடரில் மொத்தம் 24 விக்கெட்டுகள் கைப்பற்றி, இந்திய அணியில் தன்னுடைய இடத்தை நிலையாக்கினார்.
திறமைகள் பல கொண்டிருந்தாலும், அதை தொடர்ந்து வெளிப்படுத்தும் போது தான் எப்போதும் பேசப்படும் வீரராக இருக்க முடியும். இதை ஜடேஜா உணர்ந்தால், எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் ஜடேஜா இடம் பிடிப்பார் என்பது உறுதி!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.