Ravindra-jadeja | india-vs-bangladesh: இலங்கை மண்ணில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா மற்றும் நடப்பு சாம்பியானான இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான சூப்பர் 4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன.
200 விக்கெட் - வரலாறு படைத்த ஜடேஜா
இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். வங்கதேச அணியின் ஷமிம் ஹொசைனை அவர் எல்.பிடபிள்யூ செய்த நிலையில், ஜடேஜா புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எடுத்த மைல்கல்லை ஜடேஜா தனது 175வது இன்னிங்ஸில் எட்டினார். மேலும், ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எடுத்த 7வது இந்திய வீரர் மற்றும் 200 விக்கெட்டுகளை கைப்பற்றும் முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்கிற சாதனைகளை படைத்துள்ளார்.
கபில்தேவுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2வது இந்தியர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றார். கபில்தேவை முந்திச் செல்லவும், இந்தியாவின் அதிக ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறவும் அவருக்கு இன்னும் 54 ரன்கள் தேவை.
34 வயதான ஜடேஜா 50 ஓவர் வடிவத்தில் 7 நான்கு விக்கெட்டுகளையும், ஒரு 5 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் போது 2013 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5/36 ரன்களை எடுத்ததே அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.
ஜடேஜாவின் முதல் விக்கெட் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆவார். 2009ல் வதோதராவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் போட்டியின் போது, ஜடேஜா தனது முதல் விக்கெட்டை எடுத்தார்.
ஜடேஜா டெஸ்டில் 275 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“