இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இதனால் டெஸ்ட் தொடரில் 0-1 என இந்திய அணி பின்தங்கி உள்ளது.
இந்நிலையில் 2-வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகின்றது. டாசில் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்றாலும், ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறந்த முறையில் பந்து வீசி வருகின்றது. ஆஸ்திரேலியாவின் ஜோ பர்ன்ஸ் ஜஸ்பிரிட் பும்ராவிடம் விக்கெட்டை பறி கொடுத்து பூஜ்ஜிய ரன்னில் பெவிலியன் திரும்பினார். பிறகு கேப்டன் ரஹானே சுழற்பந்து வீச்சளார், ரவிச்சந்திர அஸ்வினை பந்து வீச அழைத்தார். அதன் பலனாக மாத்யூ வாடே மற்றும் ஸ்டிவ் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்களை கழற்றி, 15 ஓவர்களில் 38/ 3 என ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
அஸ்வின் தனது இரண்டாவது ஓவரை வீசிய பொழுது மாத்யூ வாடே ஸ்கொயர் - லெக்கில் பெரிய ஷொட் ஒன்று அடித்தார். பந்தை தான் கேட்ச் பிடிப்பதாக சைகை காட்டினார் ஜடேஜா. அதை கவனிக்காத சுப்மன் கில் பந்தை பிடிக்க முற்பட்டு ஜடேஜாவை இடித்து விடுகிறார். ஆனால் ஜடேஜா கேட்சை மிக கச்சிதமாக பிடிக்கிறார். பீல்டிங்கை பொறுத்தவரை ஜடேஜா எப்பொழுதுமே கலக்குவார். அது போலவே இன்றும் மிக சிறப்பாக கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.
இப்படி ஒரு நிகழ்வு அமைய முக்கிய காரணம் அணியின் கேப்டன் ரஹானேதான். ரவிச்சந்திர அஸ்வினை பந்து வீச அழைத்ததன் மூலம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். ஸ்டிவ் ஸ்மித் பற்றி சொல்ல தேவையே இல்லை, டெஸ்ட் தொடர்களில் சிறப்பாகவே விளையாட கூடியவர். ஒவ்வொரு பந்துகளையும் மிக துடிப்புடன் சந்திப்பார். அவரின் விக்கெட்டை வீழ்த்தி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகவே இருக்கும்