இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை 113 ரன்களுக்கு சுருட்டி அசத்தியுள்ளார். அது மட்டுமல்ல, கடந்த 50 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் அதி விரைவாக 2500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்தியராகவும் சர்வதேச அளவில் இரண்டாவது வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் முஹமது ஷமி 4 விகேட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய இந்திய அணி, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிற இந்திய வீரர் சேட்டேஷ்வர் புஜாரா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அக்சர் படேலின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி 262 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி 1 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை விளையாடியது. ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்ஸ்மேன்களுக்கு ரவீந்திர ஜடேஜா ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார். ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா 6 ரன்கள் எடுத்திருந்தபோது ரவீந்திர ஜடேஜா பதில் அவரை அவுட் ஆக்கினார். சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா, மார்னஸ் லேபுஸ்சேக்னே, பீட்டர் ஹேன்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், நாதன் லையான், மேத்யு குஹ்ன்மான் என ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளும் வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பந்துவீசு இதுதான். ஒரே இன்னிங்ஸில் 42 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை (7/42) வீழ்த்தியுள்ளார். இதற்கு முன் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிராக 2016-ல் பதிவு செய்த 7/48 என்ற அவருடைய முந்தைய சிறப்பான பந்துவீச்சு பதிவை முறியடித்துள்ளார். இதன் மூலம், ஒரு டெஸ்ட் போட்டியில், 10/110 என்ற புதிய சிறந்த பந்துவீச்சு ஆக பதிவாகி உள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில், இதற்கு முன் 10/154 என்பதே அவருடைய சிறந்த பந்துவீச்சாக இருந்தது.
ரவீந்திர ஜடேஜா நாக்பூர் டெஸ்டில் ஒரு ஃபிஃபர் உட்பட 7 விக்கெட்டுகளை எடுத்தார். 2-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த தொடரின் இரண்டு போட்டிகளில் 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதுவரை நடந்த தொடரில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 70 ரன், 26 ரன்கள் எடுத்துள்ளார்.
2004-க்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு இந்திய வீரரின் சிறந்த பந்துவீச்சு இதுதான்.
அதே நேரத்தில், டெஸ்டில் நம்பர்-1 ஆல்ரவுண்டர் வீரராக திகழும் ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட்களில் அதிவிரைவாக 2,500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், ரவீந்திர ஜடேஜா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த 50 ஆண்டு கிரிக்கெட்டில், 62 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி ரவீந்திர ஜடேஜா 2,500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்களை எடுத்த முதல் இந்தியராகவும், சர்வதேச அளவில் இரண்டாவதாகவும் இந்த சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன், இந்தியாவின் கபில்தேவ் 65 போட்டிகளிலும், ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் இயன் போதம் 55 போட்டிகளில் இந்த சாதனையை படைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.