Ravindra Jadeja | Ravichandran Ashwin | India vs England 3rd Test Rajkot: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், விசாகப்பட்டினத்தில் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை வியாழக்கிழமை (வருகிற 15ம் தேதி) முதல் நடைபெற உள்ளது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஜடேஜா சுவாரசிய பதில்
இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் தனது சொந்த ஊரான ராஜ்கோட்டில் இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை பாடைப்பார் என ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளர்.
இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திர ஜடேஜா பேசுகையில், அஷ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை ராஜ்கோட்டில் எடுப்பாரா? என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜடேஜா, "அவர் (அஷ்வின்) இங்கே நிச்சயம் எடுத்துவிடுவார். யாரும் கவலைப்பட தேவையில்லை. நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியாக அடைகிறேன். நான் அவருடன் பல வருடங்களாக விளையாடி வருகிறேன்.
முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதனை எடுத்து விடுவாருன்னு நினைச்சேன், ஆனா பரவாயில்ல... இங்க என்னுடைய சொந்த ஊருல அவர் அந்த சாதனையைப் படைக்க வேண்டும் என்பது தான் விதி." என்று கூறி நெகிழ்ந்துள்ளார்.
என்ன சாதனை?
தமிழத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 490 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் களமாடினார். அவர் முதல் 2 டெஸ்ட்களுக்குப் பிறகு மேலும் 9 விக்கெட்டுகளை மட்டுமே சேர்க்க முடிந்தது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், விசாகப்பட்டினத்தில் 2-வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
அஸ்வின் 3வது டெஸ்ட் போட்டியில் 500 டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெறுவார். முதல் இந்திய வீரராக அனில் கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் ஒட்டுமொத்தமாக இந்த சாதனையை படைத்த 9வது பந்துவீச்சாளர் என்கிற பெருமையையும் அடைவார். அவர் தனது 98வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“