ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் ஆசியக் கோப்பை கிரிக்கேட் போட்டியில் போட்டியில் இருந்து விலகினார். அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.
ரவீந்திர ஜடேஜாவின் வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அகில இந்திய மூத்த தேர்வுக் குழு ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அக்சர் படேலை நியமித்துள்ளது. “ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியில் இருந்து விலகினார். அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்” என்று பிசிசிஐ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜடேஜாவின் காயம் குறித்த விவரங்களை பிசிசிஐ வெளியிடவில்லை. ஆனால், புதன்கிழமை ஹாங்காங்கிற்கு எதிராக நடைபெற்ற இந்தியாவின் கடைசி குரூப் ஏ போட்டியின் போது ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டிருப்பது ஆசியக் கோப்பையில், சூப்பர் 4 கட்டத்திற்கு முன்னதாக இந்தியாவுக்கு பலத்த அடியாக கருதப்படுகிறது. ஆசியக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் இந்திய டாப்-ஆர்டரைத் திணறடிக்கத் தொடங்கிய பின்னர் ஜடேஜா 4-வது இடத்தில் பேட்டிங் செய்தார். இடது கை ஆட்டக்காரரான ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகியிருப்பது அணியின் பேட்டிங் பலம் பாதிக்க்கும் என்று கருதப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்து 36 மற்றும் 52 ரன் பார்ட்னர்ஷிப் ரன்கள் அடித்தது இந்தியாவின் ரன் ரேட்டை உயர்த்தியது.
அதே போல, ஜடேஜா 2 ஓவர்களை வீசி 11 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஜடேஜா பந்துவீச்சில் மிகவும் குறைவான ரன்களைக் கொடுத்து சிக்கனமாக பந்துவீசுபவராக உள்ளார்.
ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில், ஜடேஜாவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவர் இந்தியாவின் மிகவும் சிக்கனமாக ரன் கொடுக்கும் பந்துவீச்சாளராக இருந்தார். 193 ரன்களைத் சேஸ் செய்தபோது, பவர்பிளேயை நன்றாகப் பயன்படுத்தி விளையாடினார். 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
இருப்பினும், இந்தியா அணியில் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பதற்கான மற்றொரு வாய்ப்பு அக்சர் படேலுக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஜடேஜாவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள குஜராத்தைச் சேர்ந்த அக்சர் படேல், இந்த ஆண்டு இதுவரை கிடைத்த குறைந்த வாய்ப்புகளில் தனது பேட்டிங்கை சிறப்பாக மேம்படுத்தியுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான திருத்தி அறிவிக்கப்பட்ட இந்திய அணியில், ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.