India vs Australia 3rd Test: Ravindra Jadeja Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சுக்மன் கில் களமிறங்கினர். ஆனால், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரங்களில் பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 12 ரன்னிலும், சுப்மன் கில் 21 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த புஜாரா 1 ரன்னிலும், ஜடேஜா 4 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி 22 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த அஸ்வின் 3 ரன்னிலும், உமேஷ் யாதவ் 17 ரன்னிலும், முகமது சிராஜ் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில், 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது.ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 5 விக்கெட்டையும், மொர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
3வது நோ பால் வீசிய ஜடேஜா
இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. மிகவும் குறைந்த ஸ்கோர் என்பதால் எப்படியாவது ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்று இந்தியா தீவிரம் காட்டியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு தொடக்கத்திலேயே முட்டுக் கட்டை போட்டார் ரவீந்திர ஜடேஜா.

ஆட்டத்தின் 4வது ஓவரில் பந்துவீச வந்த ரவீந்திர ஜடேஜா நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுசாக்னேவின் விக்கெட்டை எடுத்தார். அவுட்சைட் ஆஃப் திசையில் வீசப்பட்ட பந்தை லபுசாக்னே கட் ஷாட் அடிக்க முயன்றார். அவர் எதிர்பார்த்ததை விட மிகவும் கீழாக சென்ற அந்த பந்து ஸ்டம்பில் பட்டு விக்கெட் ஆனது. இதனால் இந்திய வீரர்கள் 2வது விக்கெட்டை கைப்பற்றிவிட்டதாக கொண்டாட்டத்தில் இறங்கினர். ஆனால், ஜடேஜா வீசிய அந்த பந்து “நோ பால்” என்று நடுவர் சிக்னல் காட்ட இந்தியாவின் கொண்டாட்டம் அடங்கிப்போனது.

மார்னஸ் லபுசாக்னேவின் விக்கெட்டை இந்தியா எடுக்க தவறியதால், ஆஸ்திரேலியா 2வது விக்கெட்டிற்கு 50 ரன்களையும் கடந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. மேலும், அந்த அணிக்கு நல்ல அடித்தளமாகவும் அமைந்து போனது. எனினும், தனது தொடர் முயற்சியைக் கைவிடாத ஜடேஜா, ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆடர் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வீழ்த்தப்பட்ட 4 விக்கெட்டுகளையும் அவரே வீழ்த்தி இருந்தார். இருப்பினும், ஜடேஜா இப்படியாக இந்த தொடரில் வீசும் 3வது நோ பால் இதுவாகும். இதே போட்டியின் 2வது ஓவரின் போது உஸ்மான் கவாஜாவுக்கு ஒரு நோ பால் வீசியிருந்தார்.

முன்னதாக ஜடேஜா டெல்லியில் நடந்த 2வது டெஸ்டில் நோ பால் வீசி இருந்தார். ஜடேஜா கடைசி விக்கெட்டை எடுத்தவுடன் வெற்றி பெற்றுவிட்டோம் என இந்திய வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறவே, அது “நோ பால்” என்று குறிப்பிட்ட நடுவர், அனைவரையும் மீண்டும் களத்திற்குள் வரவழைத்து போட்டியை நடத்தினார் கள நடுவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil