ஆசைத் தம்பி
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், உடலை உண்மையில் ஃபிட்டாக தான் வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் இப்போது தீவிரமாக எழுகிறது. இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள அந்நாட்டு அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம் பெற்றிருந்த அம்பதி ராயுடு, யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்து இருக்கிறார். இதனால், அவர் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இருந்து நீக்கப்படுகிறார்.
யோ-யோ டெஸ்ட் என்றால் என்ன என்று நாம் ஏற்கனவே விவரித்துள்ளோம். இருப்பினும், வாசகர்களுக்காக மீண்டும் ஒருமுறை அதன் பற்றிய விளக்கம்,
இந்த டெஸ்ட் மூலம் ஒரு வீரரால் எவ்வளவு வேகத்தில் எவ்வளவு நேரம் ஓட முடிகிறது என்பது கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள இரு கோடுகளை, தொடர்ச்சியாக இரு இடைவெளிக்குள் ஓடி கடக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் அல்லது குறிப்பிட்ட சில நொடிகளுக்கு ஒருமுறை பீப் என சத்தம் கொடுக்கப்படும். சத்தம் கேட்டவுடன் ஒடிக்கொண்டிருக்கும் வீரர் இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். வேகம் குறைபட்டால் மீண்டும் அதே கோட்டில் துவங்கி அந்த வேகத்தை, அடுத்த பீப் சத்தம் வருவதற்குள் அடைய வேண்டும்.
இவ்வாறு வைக்கப்படும் யோ-யோ டெஸ்ட் அமைப்பு முழுவதும் மென்பொருள் கட்டமைப்பில் உள்ள ஒரு கணிப்பொறியில் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் இந்த டெஸ்ட் நடப்பதால், ஒரு வீரர் 20 மதிப்பெண் எடுத்தால் அவர் சிறப்பான உடற்தகுதியுடன் இருப்பதாக அர்த்தம்.
இந்த டெஸ்டில், இந்திய சீனியர் மற்றும் இந்திய ஏ அணி வீரர்கள் 16.1 மார்க் எடுத்தே ஆக வேண்டும். இதுதான் பென்ச்மார்க். இதற்கு கீழ் எடுத்தால் தோல்வி தான்.
இந்த மதிப்பெண்ணுக்கு குறைவாக, அம்பதி ராயுடு ஸ்கோர் செய்ததால், வேறு வழியின்றி அவர் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டாப் ஃபெர்மான்ஸ் கொடுத்தவர் அம்பதி ராயுடு. மொத்தமாக 602 ரன்கள் குவித்த ராயுடுவின் ஆவரேஜ் 43. ஸ்டிரைக் ரேட் 149.75. மற்ற ஐபிஎல் அணிகளுக்கு மிக அபாயகரமான வீரராக விளங்கிய ராயுடு, யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஆப்கன் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும், இங்கிலாந்துக்கு எதிரான இந்திய A அணியில் இடம் பெற்ற சஞ்சு சாம்சன் ஆகியோரும் யோ - யோ டெஸ்டில் தோல்வி அடைந்து அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். களத்தில் சிக்சர், பவுண்டரி என விளாசும் வீரர்கள், யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைவது, அவர்களது மோசமான உடற்தகுதியையே காட்டுகிறது. அதேசமயம், காயத்துடன் பங்கேற்ற இந்திய கேப்டன் விராட் கோலி இந்த யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், ராயுடுவுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் விவரம்:
விராட் கோலி, ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.