/indian-express-tamil/media/media_files/2025/06/05/nIoS1OUWxnOMPQYN0XAj.jpg)
ஆர்.சி.பி அணி நிர்வாகம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல், கர்நாடகா கிரிக்கெட் சங்கம் ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை அறிவித்துள்ளது.
10 அணிகள் களமாடிய 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்ச்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 18 ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக சாம்பியன் பட்டமும் வென்றது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இந்நிலையில், 18 ஆண்டுக்குப் பின் கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது. கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு சட்டசபை வளாகத்தில் உள்ள விதானசவுதாவிலும், பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையொட்டி சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு வந்தனர். சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தார்கள். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானது. இதனால் பாதுகாவலர்களும், போலீசாரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். அதே நேரத்தில் எப்படியும் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்று பெங்களூரு அணி வீரர்களை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்ல முயன்றனர்.
இதனால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. போதிய முன்னேற்பாடுகள் இன்றி வெற்றிக்கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததே இந்த துயர நிகழ்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த துயர சம்பவத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.சி.பி அணி நிர்வாகம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல், கர்நாடகா கிரிக்கெட் சங்கம் ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை அறிவித்துள்ளது. ஏற்கனவே கர்நாடக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டு இருப்பது குறிபிடத்தக்கது.
இது தொடர்பாக ஆர்.சி.பி அணி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று பெங்களூருவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆர்.சி.பி குடும்பத்திற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மரியாதை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக, இறந்தவர்களின் பதினொரு குடும்பங்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவியை ஆர்.சி.பி அறிவித்துள்ளது. கூடுதலாக, இந்த துயர சம்பவத்தில் காயமடைந்த ரசிகர்களை ஆதரிப்பதற்காக ஆர்.சி.பி கேர்ஸ் என்ற நிதியும் உருவாக்கப்பட்டு வருகிறது. எங்கள் ரசிகர்கள் நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் எப்போதும் இதயத்தில் இருப்பார்கள். நாங்கள் துக்கத்தில் ஒற்றுமையாக இருப்போம்." என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, பெங்களூருவில் கூட்ட நெரிசலில் 11 உயிரிழந்த விவகாரத்தில் ஆர்.சி.பி அணி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.