/indian-express-tamil/media/media_files/2025/06/04/OF8007rWhNnbN2vZ5KVF.jpg)
18 ஆண்டுக்குப் பின் வெற்றி பெற்ற ஐ.பி.எல் கோப்பையுடன் பெங்களூரு நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுப்பு செல்ல ஆர்.சி.பி திட்டமிட்ட நிலையில், பெங்களூரு காவல்துறை அனுமதி மறுத்ததால் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
10 அணிகள் களமாடிய 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்ச்சை நடத்தின. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களல் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. மேலும், 18 ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனிடையே, 18 ஆண்டுக்குப் பின் வெற்றி பெற்ற ஐ.பி.எல் கோப்பையுடன் பெங்களூரு நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுப்பு செல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில், பெங்களூரு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால், பெங்களூரு அணியின் வெற்றி அணிவகுப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு கார்டன் சிட்டியை அடைந்த பிறகு, திறந்த பேருந்தில் வெற்றி அணிவகுப்பை நடத்த ஆர்.சி.பி அணி திட்டமிட்டிருந்தது. மேலும், பிற்பகல் 3:30 மணிக்கு விதான சவுதாவில் தொடங்கி மாலை 5 மணிக்கு சின்னசாமி மைதானத்தை அடையவும், பிறகு அங்கு நடைபெறும் பிரமாண்டமான விழாவில் கலந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டது. ஆனால், அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், வெற்றி அணிவகுப்புக்கு பதிலாக, மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை சின்னசாமி மைதானத்தில் அணிக்கு பாராட்டு விழா மட்டும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் மற்றும் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்றவர்களுக்கு மைதானத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மைதானத்தில் வாகன நிறுத்துமிடம் குறைவாக இருப்பதால், பொதுமக்கள் மெட்ரோ மற்றும் பிற பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள சி.பி.டி பகுதியை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.