IPL 2024 | Chennai Super Kings | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப்க்கு முன்னேறாமல் வெளியேறின.
பிளே ஆஃப் சுற்றில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நாளை (சனிக்கிழமை) பெங்களூருவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி பிளே ஆஃப்க்கு முன்னேறி விடும்.
அதேநேரத்தில், பெங்களூரு அணி குறைந்தபட்சம் 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களில் ( 11 பந்துகள் மீதம் வைத்து) வெற்றி பெற வேண்டும். இதனால், இப்போட்டி லீக் சுற்றில் அரங்கேறும் நாக்-அவுட் போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
80% மழைப்பொழிவு
இந்நிலையில், பெங்களூருவில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
சமீபத்திய வானிலை அறிக்கைகளின் படி, போட்டி நடக்கும் பெங்களூரு நகரில் நாளை சனிக்கிழமை இடியுடன் கூடிய பரவலான மழை இருக்கும் என்றும், மழைப்பொழிவு 80% வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மணிக்கு 10 கி.மீ வீசும் என்றும், காற்றில் ஈரப்பதம் 75% இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
போட்டி இரவு 7:30 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை மாலை வானிலை முன்னறிவிப்பில் 'மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், '100% மேக மூட்டம்', '7.2 மிமீ' மழைப்பொழிவு, மற்றும் சூரியன் மறைவுக்குப் பிறகு வெப்பநிலை 20 டிகிரிகளின் தொடக்கத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“