RCB vs CSK Weather Update | IPL 2024 | Chennai Super Kings | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப்க்கு முன்னேறாமல் வெளியேறின.
பிளே ஆஃப் சுற்றில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று சனிக்கிழமை பெங்களூருவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி பிளே ஆஃப்க்கு முன்னேறி விடும்.
அதேநேரத்தில், பெங்களூரு அணி குறைந்தபட்சம் 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களில் ( 11 பந்துகள் மீதம் வைத்து) வெற்றி பெற வேண்டும். இதனால், இப்போட்டி லீக் சுற்றில் அரங்கேறும் நாக்-அவுட் போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
பெங்களூரு வானிலை எப்படி இருக்கு?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ள பெங்களூரு நகரில் காலையில் வெயில் இருந்தது. அங்கு வாரயிறுதியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தாலும், எம்.சின்னசாமி ஸ்டேடியம் அமைந்துள்ள நகரின் மையப்பகுதியில் மழை பெய்யவில்லை.
நேற்று வெள்ளிக்கிழமை, மாலையில் கனமழை பெய்யும் என்று முன்னறிவிக்கப்பட்ட போதிலும், இரு அணிகளும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நீண்ட நேர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
பெங்களூரு நகர் நேற்று வெள்ளிக்கிழமை முழுவதும் இருட்டாக இருந்த நிலையில், சனிக்கிழமை காலை பிரகாசமாகவும் வெயிலாகவும் இருந்தது. போட்டி முழுவதும் 100 சதவீதம் மேக மூட்டம் இருக்கும் என்றும் மாலையில் கனமழை பெய்யும் அபாயம் இன்னும் உள்ளது என்றும் சமீபத்திய வானிலை அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பெங்களூருவின் மத்திய பகுதியில் மாலை 4-8 மணிக்குள் மட்டுமே லேசான மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பெங்களூரு - சென்னை அணிகள் மோதும் போட்டி சற்று தாமதமாக தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
போட்டியின் போது பலத்த மழை பெய்தால், ஐந்து ஓவர்கள் கொண்ட போட்டியாக தொடங்குவதற்கான கட்-ஆஃப் நேரம் இரவு 10:56 ஆகும். சின்னச்சாமி ஸ்டேடியத்தில் சப்-ஏர் வடிகால் அமைப்பு இருப்பதால், மழை முற்றிலும் நின்ற பிறகு மைதான ஊழியர்கள் ஆட்டத்தைத் தொடங்க 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.
மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால், சி.எஸ்.கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.