10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வியாழக்கிழமை இரவு 7:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 24-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RCB vs DC LIVE Cricket Score, IPL 2025
நடப்பு தொடரில் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியடையாமல் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி வெற்றி நடைப் போட்டு வருகிறது. தற்போது 6 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் அந்த அணி அதன் ஆதிக்கத்தை தொடரவே நினைக்கும்.
மறுபுறம், ரஜத் படிதர் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றியை ருசித்து, பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. அதனால், இந்த ஆட்டத்தில் வெற்றியைப் பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முன்னேறும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வ செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில், தொடக்க வீரர்கள் பில் சால்ட் விராட் கோலி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்து அசத்தியது. அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 17 பந்துகளில், 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து முன்னாள் கேப்டன் விராட்கோலி, 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 ரன்களும், படிக்கல் 8 பந்துகளில் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் படிதார் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், லிவிங்ஸ்டன் 4, ஜித்தேஷ் சர்மா 3, ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குனால் பாண்டியா 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட் 20 பந்துகளில், 2 பவுண்டரி 4 சிக்சருடன்’ 37 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில், பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. லெ்லி அணி தரப்பில், நிகாம், குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மொஹித் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர் பாப் டூபிளசிஸ் 2 ரன், மெக்குர்க் அபிஷேக் பொரோல் ஆகியோர் தலா 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் டெல்லி அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் அக்சர் பட்டேல் – கே.எல்.ராகுல் ஜோடி அணியை சரியில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டது. குறிப்பாக இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.
11 பந்துகளை சந்தித்த அக்சர் பட்டேல், 2 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஸ்டப்ஸ் ராகுலுடன் இணைந்து விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினார். நிதானமாக விளையாடிய ராகுல் அரைசதம் கடந்த நிலையில், அடுத்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இதனால் டெல்லி அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறிய நிலையில், 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்த டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்த ராகுல், 53 பந்துகளில் 7 பவுண்டரி 6 சிக்சருடன் 93 ரன்களும், 23 பந்துகளை சந்தித்த ஸ்டப்ஸ் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். பெங்களூரு அணி தரப்பில், புவனேஷ்வர் 2, சூயஷ் சர்மா, யஷ் தயாள ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 4-வது வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி 8 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. தோல்வியை சந்தித்த பெங்களூர் அணி 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோகித் சர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் 31 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 31 போட்டிகளில் பெங்களூரு அணி 19 போட்டிகளில் வென்றுள்ளது. அதே நேரத்தில் டெல்லி அணி 11 முறை வெற்றி பெற்றுள்ளது.