முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் தொடரில் பெங்களூரு அணிக்கும் டெல்லி அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில், அமெரிக்க வீராங்கனை தாரா நோரீஸின் அசத்தலான பந்துவீச்சில் பெங்களூருவை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (WPL) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் சனிக்கிழமை (மார்ச் 04) தொடங்கியது. முதலாவது ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி பெற்றது.
WPL தொடரின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. முதலவாது ஆட்டத்தில் டெல்லி-பெங்களூரு அணிகள் விளையாடியது.
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மெக் லானிங்கும், ஷபாலி வர்மாவும் களம் இறங்கினர்.
இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் ஷபாலி 84 ரன், மெக் லானிங் 72 ரன், மரிசான் கேப் 17 பந்துகளில் 39 ரன்னும் குவித்தனர். பெங்களூரு அணி தரப்பில் ஹெதர் நைட் 2 விக்கெட்டுகள் வீத்தினார்.
இதையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மந்தனா 35 ரன், ஷோபி டெவைன் 14 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரி 31 ரன், திஷா கசட் 9 ரன், ரிச்சா கோஷ் 2 ரன், கனிகா அஹுஜா 0 ரன், ஆஷா ஷோபனா 2 ரன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினார்கள். இதனால், பெங்களூரு அணி 96 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனிடையே, களம் இறங்கிய ஹெதர் நைட் அதிரடி அதிரடியாக விளையாடி 21 பந்தில் 34 ரன் எடுத்திருந்த நிலையில் தாரா நோரிஸ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
சிறபாக பந்துவீசிய அமெரிக்காவை சேர்ந்த தாரா நோரிசுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், டெல்லி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணியில் சிறப்பாக பந்துவீசிய அமெரிக்க வீராங்கனை தாரா நோரிஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"