IPL 2024 | Royal Challengers Bangalore | Gujarat Titans: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கும் 52வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RCB vs GT Live Score, IPL 2024
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொடக்க வீரர்களான சஹா ஒரு ரன்னுக்கும், கில் 2 ரன்னுக்கும் வெளியேறினர். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாய் சுதர்சன் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததால், 19 ரன்களுக்கு குஜராத் அணி முக்கிய 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
4-வது விக்கெட்டுக்கு இணைந்து ஷாருக்கான் – மில்லர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டது. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில், 20 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்த மில்லர் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய திவாட்டிய ஒருபுறம் அதிரடியாக விளையாட, மறுமுனையில், ஷாருக்கான் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
24 பந்துகளை சந்தித்த சாய் சுதர்சன் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 37 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய ரஷித் கான் 14 பந்துகளில் 18 ரன்களும், விஜய் சங்கர் 10 ரன்களுக்கும், அதிரடியாக விளையாடிய திவாட்டிய 21 பந்துகளில் 5 பவுண்’டரி ஒரு சிக்சருடன் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 19.3 ஓவர்களில் குஜராத் அணி 147 ரன்களுக்கு சுருண்டது.
பெங்களூர் அணி தரப்பில், சிராஜ், தயாள், வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கிரீன், கரன் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 148 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு கேப்டன் டூபிளசிஸ் – விராட் கோலி ஆகிய இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடியதால் பெங்களூர் அணி வேகமாக வெற்றியை நோக்கி முன்னேறியது. அதிரடியாக விளையாடிய டூபிளசிஸ் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவர்களில் 92 ரன்கள் சேர்த்தபோது டூபிளசிஸ் ஆட்டமிழந்தார்.
23 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 64 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 1, படிதார் 2, மேக்ஸ்வெல் 4, கிரீன் 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய விராட்கோலி, 27 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 42 ரன்கள் குவித்து வெளியேறினார். இதனால் 11 ஓவர்களில் 117 ரன்கள் குவித்திருந்தாலும், பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து 7-வது விக்கெட்டுக்கு இணைந்த தினேஷ் கார்த்திக் – ஸ்வப்னில் சிங் இருவரும் அதிரடியாக விளையாடி வெற்றியை உறுதி செய்தனர். 13.4 ஓவர்களில் பெங்களுர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 12 பந்துகளில் 21 ரன்களும், ஸ்வப்னில் சிங் 9 பந்துகளில் 15 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“