10 அணிகள் பங்கேற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வந்தது. இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025 Today Match, RCB vs KKR LIVE SCORE
இந்நிலையில், போர்ப்பதற்றம் தணிந்ததை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.), ஐ.பி.எல். போட்டி இன்று சனிக்கிழமை (மே.17) முதல் மீண்டும் தொடங்கி நடைபெறும் என அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக டாஸ் கூட போட முடியாத சூழல் உருவானது. இதனால், போட்டி தாமதமாக தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், மழையின் தாக்கம் குறையாததால் போட்டியை ரத்து செய்யும் நிலை உருவானது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
போட்டி ரத்து செய்யப்பட்டதால் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. முன்னதாக புள்ளிப் பட்டியலில் 17 புள்ளிகளுடன் பெங்களூரு அணி முதல் இடத்திலும், 12 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி 6-வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.