Royal Challengers Bengaluru vs Punjab Kings IPL 2024 Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று (திங்கள் கிழமை) இரவு 7:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கும் 6வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங் தேர்வு; பஞ்சாப் முதலில் பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
பஞ்சாப் பேட்டிங்
பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். பேர்ஸ்டோ 8 ரன்களில் வெளியேறினார். அவர் சிராஜ் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்ததாக பிரப்சிம்ரன் களமிறங்கி அதிரடியாக ஆடினார். 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடித்த பிரப்சிம்ரன் 25 ரன்களில் அவுட் ஆனார். அவர் மேக்ஸ்வெல் பந்தில் அனுஜிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்த வந்த லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆட முயன்று 17 ரன்களில் அவுட் ஆனார்.
இதனையடுத்து களமிறங்கிய சாம் கரண் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த தவான் 45 ரன்களில் அவுட் ஆனார். அவர் மேக்ஸ்வெல் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார். இந்தநிலையில், சாம் கரணுடன் ஜிதேஷ் ஜோடி சேர்ந்தார். இருவரும் 50 ரன்களுக்கு மேல் சேர்த்த நிலையில், சாம் கரண் அவுட் ஆனார். சாம் கரண் 23 ரன்கள் எடுத்து யாஷ் பந்தில் அனுஜிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்ததாக ஷஷாங்க் களமிறங்கிய நிலையில், 27 ரன்களில் ஜிதேஷ் அவுட் ஆனார். அவர் சிராஜ் பந்தில் அனுஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து ஹர்பிரீத் களமிறங்கினார். ஷஷாங்க் 2 சிக்சர் மற்றும் 1 பவுண்டரி விளாசி 21 ரன்கள் எடுத்த நிலையில், பஞ்சாப் ஆட்டம் முடிவுக்கு வந்தது, ஹர்பிரீத் 2 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் சிராஜ், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்களையும், யாஷ் மற்றும் ஜோசப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பெங்களூரு பேட்டிங்
பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டூபிளசிஸ் களமிறங்கினர். டூபிளசிஸ் 3 ரன்களில் வெளியேறினார், அடுத்து வந்த கிரீனும் 3 ரன்களில் வெளியேறினார். இருவரது விக்கெட்டையும் ரபாடா வீழ்த்தினார். அடுத்து வந்த படிதார் 18 ரன்களிலும், மேக்ஸ்வெல் 3 ரன்களிலும் வெளியேறினர். இருவரையும் ஹர்பிரீத் போல்டாக்கினார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த கோலி பவுண்டரிகளாக அடித்து அரை சதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த கோலி 77 ரன்களில் அவுட் ஆனார். அவர் படேல் பந்தில் ஹர்பிரீத்திடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த அனுஜ் 11 ரன்களில் வெளியேறினார். அவர் சாம் கரண் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார்.
அடுத்து தினேஷ் கார்த்திக் மற்றும் மகிபால் ஜோடி சேர்ந்து, கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடினர். இருவரும் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி அணியை வெற்றி பெறச் செய்தனர். பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 28 ரன்களுடனும், மகிபால் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பஞ்சாப் தரப்பில் ரபாடா, ஹர்பிரீத் தலா 2 விக்கெட்களையும், சாம் கரண் மற்றும் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RCB vs PBKS Live Score, IPL 2024
பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மறுபுறம், பஞ்சாப் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியது. அதனால், அந்த அணி வெற்றிப்பயணத்தை தொடரும் ஆவலில் உள்ளது. அதேவேளையில், பெங்களுரு அணி சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் அதுவும் பேட்டிங்குக்கு உகந்த மைதானத்தில் ஆடுவதால் வெற்றிக் கணக்கை தொடங்க தீவிர முனைப்பு காட்டுவார்கள். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), அல்ஜாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.