RCB vs RR, IPL 2024 | Rajasthan Royals vs Royal Challengers Bangalore Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RR vs RCB Live Score, IPL 2024
டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்; பெங்களூரு முதலில் பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
பெங்களூரு பேட்டிங்
பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டூபிளசிஸ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ராஜஸ்தான் பந்துவீச்சை நொறுக்கினர். பவுண்டரிகளாக விளாசிய கோலி அரை சதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ராஜஸ்தான் பவுலர்கள் திணறினர்.
கோலி – டூபிளசிஸ் ஜோடி 125 ரன்கள் சேர்த்த நிலையில், முதல் விக்கெட் விழுந்தது. டூபிளசிஸ் 44 ரன்களில் சாஹல் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் ஒரு ரன்னில் வெளியேறினார். பர்கர் அவர் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த சவுரவ் சவுகான் ஒரு சிக்ஸ் அடித்து 9 ரன்னில் அவுட் ஆனார். அவர் சாஹல் பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்ததாக கிரீன் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த கோலி சதம் விளாசினார். கிரீன் 5 ரன்கள் எடுத்திருந்தப்போது பெங்களூரு அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. கோலி 72 பந்துகளில் 113 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும். ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 2 விக்கெட்களையும், பர்கர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ராஜஸ்தான் பேட்டிங்
ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 2 ஆவது பந்திலே டக் அவுட் ஆனார். அவர் டோப்லே பந்தில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்தார். இந்தநிலையில், பட்லருடன் ஜோடி சேர்ந்தார் சஞ்சு சாம்சன். இருவரும் பெங்களூரு பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். சிறப்பாக ஆடி வந்த இருவரும் அரை சதம் விளாசினார். இவர்கள் இருவரையும் பிரிக்க முடியாமல் பெங்களூரு பவுலர்கள் திணறினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடி வந்த சாம்சன் 42 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் சிராஜ் பந்தில் தயாளிடம் கேட்ச் கொடுத்தார். சாம்சன் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர் விளாசினார். அடுத்து வந்த ரியான் 4 ரன்களிலும், துருவ் 2 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்ததாக ஹெட்மயர் களமிறங்கி 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் எடுத்தார். மறுபுறம் ஆடிய பட்லர் சதம் அடிக்க ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. பட்லர் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். பெங்களூரு தரப்பில் டோப்லே 2 விக்கெட்களையும், சிராஜ் மற்றும் தயாள் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சவுரவ் சவுகான், ரீஸ் டாப்லி, மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்.
இரு அணிகளின் இம்பாக்ட் பிளேயர்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: சுயாஷ் பிரபுதேசாய், மஹிபால் லோம்ரோர், ஹிமான்ஷு சர்மா, விஜய்குமார் வைஷாக், ஸ்வப்னில் சிங்
ராஜஸ்தான் ராயல்ஸ்: ரோவ்மேன் பவல், தனுஷ் கோட்டியான், குல்தீப் சென், சுபம் துபே, அபித் முஷ்டாக்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அதன் தொடக்க ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சையும், அடுத்த ஆட்டங்களில் டெல்லி கேப்பிட்டல்சையும், மும்பை இந்தியன்சையும் வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியோடு வீறுநடை போடுகிறது. மறுபுறம், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்ற பெங்களூரு அடுத்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை சாய்த்தது. ஆனால், அடுத்த நடந்த ஆட்டங்களில் கொல்கத்தா நைட் ரைடர்சிடமும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடமும் தோல்வியைத் தழுவியது.
சொந்த மைதானத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவாளர்களுடன் களமிறங்கும் ராஜஸ்தான் தனது வெற்றிப்பயணத்தை நீட்டிக்க நினைக்கும். அதேநேரத்தில், சரிவில் இருந்து எழுச்சிப்பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்ப பெங்களூரு தீவிரமாக போராடும். எனவே, இவ்விரு அணிகள் மல்லுக்கட்டும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
பெங்களூரு vs ராஜஸ்தான் - நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 30 ஆட்டங்களில் பெங்களூர் 15ல் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில், ராஜஸ்தான் 12 முறை வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் முடிவு இல்லாமல் முடிந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.