10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, RCB vs SRH LIVE Cricket Score
இந்நிலையில், இன்று இரவு 7:30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் போடுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹைதராபாத் அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். இதில் டிராவிஸ் ஹெட் 10 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஓரளவிற்கு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் சேர்த்தார். எனினும், அவரது விக்கெட்டை லுங்கி இங்கிடி கைப்பற்றினார். அடுத்ததாக, இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் கரம் கோர்த்தனர். இதில், கிளாசென் 24 ரன்கள் எடுத்த நிலையில், சுயாஷ் சர்மாவிடம் தனது விக்கெட்டை இழந்தார். இதனால், அனிகேத் வர்மா களம் இறங்கினார்.
மற்றொரு புறம், இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனிடையே, 9 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்து 26 ரன்கள் சேர்த்த அனிகேத் வர்மாவின் விக்கெட்டை க்ருனால் பாண்டியா வீழ்த்தினார். அடுத்ததாக களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி, வெறும் 4 ரன்களுடன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அபினவ் மனோகரும் 12 ரன்களில் நடையைக் கட்டினார்.
ஆனால், பொறுப்பாக விளையாடிய இஷான் கிஷன் 48 பந்துகளில், 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பேட் கம்மின்ஸும் 6 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 13 ரன்கள் அடித்திருந்தார். பெங்களூரு தரப்பில் இருந்து ரொமாரியோ ஷெப்பர்ட் இரண்டு விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, க்ருனால் பாண்டியா மற்றும் யாஷ் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அதன்படி, 20 ஓவர்களில் ஹைதரபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.
பெங்களூரு அணியில் இருந்து பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இவர்கள் இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். குறிப்பாக, பிலிப் சால்ட் 32 பந்துகளில், 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களும், விராட் கோலி 25 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்களும் குவித்தனர்.
ஆனால், இவர்களுக்கு அடுத்தபடியாக இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். மயங்க் அகர்வால் 11 ரன்களிலும், ராஜத் பதிதார் 18 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 24 ரன்களிலும் அவுட்டாகினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இதனால், பெங்களூரு அணியால் வெற்றிக்கான இலக்கை எட்டிப் பிடிக்க முடியவில்லை.
அதன்படி, 19.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பெங்களூரு அணி இழந்தது. இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் இருந்து பேட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளும், எஷான் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளும், ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷல் படேல், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ஜிதேஷ் சர்மா (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், லுங்கி இங்கிடி, சுயாஷ் சர்மா.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், எஷான் மலிங்கா