Shubman Gill | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அடுத்த சுற்றான சூப்பர் 8-க்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்த நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், சூப்பர் 8 சுற்றில் இந்தியா அதன் முதல் போட்டியில் ஜூன் 20 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது. இப்போட்டியானது வெஸ்ட் இண்டீசில் உள்ள பார்படாஸ் பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதனிடையே, இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் 4 பேர் ரிசர்வ் வீரர்களாக பயணித்தனர். ரிங்கு சிங், சுப்மன் கில், ஆவேஷ் கான் மற்றும் கலீல் அகமது ஆகியோரைத் தேர்வு இந்திய அணி நிர்வாகம் (பி.சி.சி.ஐ.) அனுப்பி இருந்தது. தற்போது இந்த 4 வீரர்களில் சுப்மன் கில், ஆவேஷ் கான் இருவரும் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர்.
இந்நிலையில், இந்திய இளம் வீரர் சுப்மன் கில் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதனால் தான் அவர் தாயாகம் திரும்ப அனுப்பப்பட உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. கில் இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டாலும், அணி விளையாடும் போட்டிகளை நேரில் காண வரவில்லை. ஆவேஷ் கான், ரிங்கு சிங், கலீல் அகமது ஆகியோர் நேரில் வந்த போதும், சுப்மன் கில் மட்டும் மைதானத்திற்கு வராமலேயே இருந்தார். அத்துடன், இன்ஸ்டாகிராமில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை பின் தொடர்வதில் இருந்து சுப்மன் கில் விலகினார்.
தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தான், கில் கேப்டன் ரோகித்தை இன்ஸ்டாகிராமில் இருந்து 'அன்ஃபாலோ' செய்தார் என்றும், நன்னடத்தையை பின்பற்றாததாலும் ரோகித் சர்மாவுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாகவும் சுப்மன் கில் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டதாகவும் தகவல் பரவின.
இந்த நிலையில், இந்தியா - கனடா ஆட்டம் கைவிடப்பட்ட பிறகு பேசிய , இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், கில் மற்றும் அவேஷ் ஆகியோரை திருப்பி அனுப்பும் முடிவு போட்டி தொடங்குவதற்கு முன்பே எடுக்கப்பட்டதாகக் கூறி ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், "இது எங்களுடைய ஆரம்பகட்ட திட்டமாகும். அமெரிக்காவுக்கு வந்தபோது எங்களுடன் 4 ரிசர்வ் வீரர்கள் இருந்தனர். அங்கு போட்டிகள் முடிந்ததும் இருவரை விடுவிப்பது என்றும் இருவர் மட்டும் எங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் வருவது என்றும் ஏற்கனவே நாங்கள் தீர்மானித்தோம். எனவே அணி தேர்வான போதே இந்த திட்டம் வகுக்கப்பட்டது. அதை நாங்கள் தற்போது பின்பற்றுகிறோம். அவ்வளவுதான்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“