Ricky Ponting | BCCI: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தொடங்கியுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த 13 ஆம் தேதியே பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்து இருந்தாலும், மறுபுறம் பி.சி.சி.ஐ நிர்வாகமும் தீவிரமான தேடலில் இறங்கியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Ricky Ponting says he declined India coaching job offer as it doesn’t fit into his ‘lifestyle’ right now
முன்னதாக, சி.எஸ்.கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட உள்ளார் என்கிற தகவல் பரவியது. ஆனால், இந்திய பயிற்சியாளர் பதவியை ஃப்ளெமிங் ஏற்க விரும்பவில்லை என்று தான் கருதுவதாகவும் சி.எஸ்.கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார். "ஒரு வருடத்தில் ஒன்பது முதல் 10 மாதங்கள் வரை அவர் ஈடுபட விரும்பாததால், அது அவருடைய வேலையாக இருக்காது என்று எனக்குத் தெரியும். அது என் உணர்வு. அவருடன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை,'' என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தன்னை அணுகியதாகவும், அந்த வாய்ப்பை தான் நிராகரித்ததாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும், அவர் ஏன் அந்த வாய்ப்பை நிராகரித்தார் என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
விளக்கம்
இது குறித்து தற்போது ஐ.பி.எல் தொடருக்கான டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணிபுரியும் ரிக்கி பாண்டிங் பேசுகையில், "அது பற்றிய பல அறிக்கைகளை நான் பார்த்தேன். பொதுவாக, இந்த விஷயங்கள் சமூக ஊடகங்களில் பாப்-அப் ஆகும். ஆனால் ஐ.பி.எல் போட்டியின் போது, நான் அதைச் செய்வேனா என்ற ஆர்வத்தை என்னிடமிருந்து பெறுவதற்காக சில சிறிய அளவிலான பேச்சுவார்த்தைகள் நடந்தன.
நான் ஒரு தேசிய அணியின் மூத்த பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் வைத்திருக்கும் மற்ற விஷயங்களையும் பார்க்க வேண்டும் அதில், எனது குடும்பமும் அடங்கும். அவர்களுடன் சிறிது நேரத்தை கழிக்க விரும்புகிறேன். நீங்கள் இந்திய அணியில் வேலை செய்தால் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஐ.பி.எல் அணியில் பங்கேற்க முடியாது.
மேலும், தேசிய அணி தலைமை பயிற்சியாளர் என்பது வருடத்தில் 10 அல்லது 11 மாத வேலையாகும். நான் அதைச் செய்ய விரும்பும் அளவுக்கு, அது இப்போது எனது வாழ்க்கை முறைக்கும், நான் மிகவும் ரசிக்கும் விஷயங்களுக்கும் பொருந்தாது.
வேறு சில பெயர்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஜஸ்டின் லாங்கரின் பெயர் நேற்று பேசப்பட்டது, ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக பேசப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக கவுதம் கம்பீரின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக அடிபடுகிறது. ஆனால் நான் கூறிய காரணங்களால் அது எனக்கு சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்.
எனது குடும்பத்தினரும் எனது குழந்தைகளும் கடந்த ஐந்து வாரங்களாக ஐபிஎல்லில் என்னுடன் செலவிட்டுள்ளனர், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வருவார்கள், அதைப் பற்றி என் மகனிடம் கிசுகிசுத்தேன், 'அப்பாவுக்கு இந்திய பயிற்சியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது' என்று நான் சொன்னேன். அதை எடுத்துக் கொள்ளுங்கள் அப்பா (ஜஸ்ட் டேக் இட் டாடி) நாங்கள் அடுத்த இரண்டு வருடங்கள் அங்கு செல்ல விரும்புகிறோம் என்றார்கள். அவர்கள் அங்கு இருப்பதையும், இந்தியாவில் உள்ள கிரிக்கெட் கலாச்சாரத்தையும் எவ்வளவு விரும்புகிறார்கள். ஆனால் இப்போது அது எனது வாழ்க்கை முறைக்கு சரியாக பொருந்தவில்லை."
ஐ.பி.எல் போட்டியின் போது, இந்திய தலைமை பயிற்சியாளர் பதவி பற்றி சிலருடன் நான் சில உரையாடல்களை நடத்தினேன். நான் பேசிய நபர்கள் அதைச் செயல்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர், ”என்று ரிக்கி பாண்டிங் 2021 இல் ‘தி கிரேடு கிரிக்கெட்டர்’ போட்காஸ்டிடம் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.