இந்திய கிரிக்கெட் அணியில் இளம் நட்சத்திர வீரராக களமாடி வருபவர் சுப்மன் கில். தனது அதிரடி தொடக்க ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கில் கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். தற்போது 3 ஃபார்மெட்டுகளிலும் விளையாடி வரும் அவர், 25 டெஸ்ட் போட்டிகளில் 4 சதம், 6 அரைசதங்களுடன் 1492 ரன்களை எடுத்துள்ளார்.
44 ஒருநாள் போட்டிகளில் 6 சதம், 13 அரைசதங்களுடன் 2271 ரன்களையும், 14 டி-20 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 335 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும், சர்வதேச அரங்கில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ஐ.பி.எல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்திய கில், 12 போட்டிகளில் 426 ரன்களை எடுத்தார்.
அண்மையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். அவரது தலைமையிலான இளம் இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. தற்போது ஓய்வில் இருக்கும் அவர் வருகிற 28 ஆம் தேதி முதல் தொடங்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
/indian-express-tamil/media/post_attachments/6e5e9ff65d573233ecd2f55182fb37b5111b5a3253e06e911528465f00c83b57.jpg)
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், சின்னத்திரை நடிகை ரிதிமா பண்டிட்டை கடந்த சில நாட்களாக டேட்டிங் செய்து வருவதாகவும் அவர்கள் இருவரும் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவியது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணம் நடக்கலாம் என்றும், அவர்கள் இருவரும் தங்களின் திருமணத்தை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறப்பட்டது. அதனால் அவர்கள் தங்களின் திருமணம் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும், அவர்கள் திருமணத்தில் மீடியா கவரேஜ் எதுவும் அனுமதிக்கப்படாது எனவும் தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், இது தொடர்பாக நடிகை ரிதிமா பண்டிட் விளக்கம் அளித்துள்ளார். "சுப்மன் கில்லும் நானும் எந்த உறவிலும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அவரை நான் சந்தித்ததே கிடையாது. அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். ஒருவேளை நாங்கள் சந்தித்தால், இந்த விவகாரம் குறித்து சிரிப்போம் என்று நினைக்கிறேன். அதேபோல் சுப்மன் கில் ரொம்பவே க்யூட். ஆனால் எங்களுக்குள் எந்த உறவும் இல்லை.
இது வெறும் கற்பனை கதை தான். யாரோ எழுதியதால் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. காலையில் இருந்து எனக்கு சில வாழ்த்து செய்திகள் கூட வரத் தொடங்கிவிட்டன. இந்த வதந்தியை மறுத்தி சலிப்பு ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே சோசியல் மீடியாவிலும் பதிவிடுகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே உள்ளேன்" என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதத்தில் இதேபோன்ற விளக்கத்தை நடிகை ரிதிமா பண்டிட் கொடுத்த நிலையில், தற்போது அடுத்த ஒரு மாதத்திலே மீண்டும் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் விளம்பரம் தேடப் பார்க்கிறார் என்றும், இப்படி ஒரு நடிகை இருப்பது பற்றி சுப்மன் கில்லுக்கு தெரிந்து இருக்கக் கூட வாய்ப்பில்லை என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
சின்னத்திரை நடிகையான ரிதிமா பண்டிட், பஹு ஹமாரி ரஜினிகாந்த் மற்றும் கத்ரா கத்ரா கத்ரா போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு பெயர் பெற்றவர். பிக் பாஸ் ஓ.டி.டி-யின் முதல் சீசனிலும் அவர் பங்கேற்று இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஆகியோருடன் சுப்மன் கில் டேட்டிங் செய்து வருவதாகவும் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“