இந்திய மண்ணில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் டி-20 தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மிரட்டலாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரிங்கு சிங். உத்திரபிரதேசம் மாநிலம் அலிகாரைச் சேர்ந்த இவர், ஐ.பி.எல்-லில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை பெற்றார். அதன்படி, இந்திய அணியில் 2023 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார்.
இதுவரை ரிங்கு சிங் இந்திய அணிக்காக 30 டி20 போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 507 மற்றும் 55 ரன்களை எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் ஸ்பெலிஸ்ட் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் அவர் இன்னும் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம்வில்லை. அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் டி20 தொடரில் விளையாட இருக்கிறார்.
இந்நிலையில், இந்திய வீரர் ரிங்கு சிங்கிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற பிரியா சரோஜ் என்பவரை மணக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் அரசியல் குடும்பங்களில் ஒன்றின் வாரிசு பிரியா சரோஜ். அவர் தொழில்முறையில் ஒரு வழக்கறிஞர். அவரது தந்தை டூஃபானி சரோஜ் மச்லிஷாஹர் தொகுதியில் 1999, 2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தல்களில் மூன்று முறை தொடர்ந்து போட்டியிட்டு வென்றவர். இந்நிலையில், 26 வயதான பிரியா சரோஜ் சமாஜ்வாடி கட்சி சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் மச்லிஷாஹர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் பா.ஜ.க-வின் மூத்த அரசியல் தலைவரான பிபி சரோஜை எதிர்த்து நின்று வெற்றி பெற்று இருந்தார்.
இந்த நிலையில், அரசியலில் அதிரடியாக செயல்பட்டு வரும் பிரியா சரோஜை ரிங்கு சிங் கரம்பிடிக்க உள்ளார். அவருக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திருமண தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.