T20 World Cup 2024 | IPL 2024 | Shivam Dube | Rinku Singh: 2024 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி-20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் வருகிற ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஜூன் 9 ஆம் தேதி அன்று நியூயார்க்கின் புறநகர் பகுதியில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இதனிடையே, இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி அனைவரும் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள். இதில், எந்த வீரரை டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் சேர்ப்பது என்கிற குழப்பம் தேர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ரிங்கு சிங் Vs சிவம் துபே - இந்தியாவின் டி-20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்கப்போவது யார்?
இந்நிலையில், இந்த சீசனில் இந்திய வீரர்களான ரிங்கு சிங், சிவம் துபே ஆகியோர் தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்கள். பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டி அணிக்கு தேவையான ரன்களை குவித்து வருகிறார்கள். இந்த இரண்டு வீரர்களில் எந்த வீரருக்கு டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பது தொடர்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், "ரிங்குவின் அற்புதமான அவதார ஆட்டம் இன்னும் பார்க்கப்படவில்லை, ஏனெனில் அவர் இன்னும் அவ்வளவாக பேட்டிங் செய்யவில்லை. அவர் குறைவாக பேட்டிங் செய்யும்போது, அவர் எத்தனை பந்துகளில் விளையாட வேண்டும், எவ்வளவு அடிக்க வேண்டும் என்பதில் சிக்கிக் கொள்கிறார். (ஆண்ட்ரே) ரசல் நன்றாக விளையாடுவதால், அவரை பேட்டிங் செய்ய முன்னதாக களமிறக்குவதில்லை.
அவர் இந்த சீசனில் குறைவாக பேட்டிங் செய்யக்கூடும். இருப்பினும், ரிங்கு பேட்டிங் செய்து ரன்களை எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு பேராசை உள்ளது. உலகக் கோப்பை நெருங்கி வருவதால், ரிங்கு சிங்கின் பேட்டில் இருந்து தொடர்ந்து ரன்கள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் களமிறங்க விரும்ப சண்டை போடும் இடத்தில், சிவம் துபே ஏற்கனவே நன்றாக விளையாடுகிறார். நான் சிவம் துபேவை எவ்வளவு நேசிக்கிறேனோ, அதே அளவு ரிங்கு சிங்கையும் நேசிக்கிறேன்." என்று அவர் கூறினார்.
நடப்பு சீசனில் இதுவரை 7 போட்டிகளில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ஆடியுள்ள ரிங்கு சிங் 107 ரன்கள் எடுத்துள்ளார். அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் ஆகியிருக்கும் துபே 311 ரன்களை குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 66* ஆக உள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிப்பதற்கான கடைசி தேதி மே 1 ஆகும். எனவே, ஏப்ரல் கடைசி வாரத்தில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.