scorecardresearch

ரிஷப் பண்ட் விபத்து: காரில் இருந்தது என்ன? காப்பாற்றிய நபர்கள் பேட்டி

பண்ட் ஒரு கிரிக்கெட் வீரர் என்று தங்களுக்கு தெரியாது என்றும், கிரிக்கெட் போட்டியை பார்த்தது இல்லை என்று பண்ட்டை விபத்து பகுதியில் இருந்து மீட்ட பேருந்து ஓட்டுநர் சுஷில் குமார் – நடத்துநர் பரம்ஜித் சிங் கூறியுள்ளனர்.

Rishabh Pant accident: Rescued bus driver interview Tamil News
Rishabh Pant’s belongings were not stolen after accident, says Rescued bus driver Tamil News

Rishabh Pant accident Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக இருப்பவர் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் நேற்று காலை தனது மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-AMG GLE43 Coupe) காரில் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த காரை அவரே ஓட்டி சென்றுள்ளார்.

டிவைடரில் மோதி தூக்கி எறியப்பட்ட பண்ட்டின் கார்

டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் ரூர்க்கி பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இதில் சாலையில் இருந்த டிவைடரை உடைத்து கொண்டு கார் சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. டிவைடரில் மோதிய அவரது கார் திடீரென தீப்பிடித்தது.

உடனே ரிஷப் பண்ட் கார் கண்ணாடியை உடைத்து அவரே தானாகவே வெளியே வந்தார். காரில் தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார். விபத்து குறித்த தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிறகு பண்ட்டை மீட்டு அப்பகுதியில் இருந்த சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பண்ட் கார் விபத்து குறித்து பி.சி.சி.ஐ அறிக்கை

இதன்பிறகு பண்ட் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக பிசிசிஐ அறிக்கையை நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், பண்ட்டின் நெற்றியில் இரண்டு வெட்டுக் காயங்கள், வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது, வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலில் காயம் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.

பண்ட் காரில் இருந்தது என்ன? காப்பாற்றிய நபர்கள் பேட்டி

இதற்கிடையில், ரிஷப் பண்ட் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது தாயாரை ஆச்சரியப்படுத்தவும், தனது சொந்த வீட்டில் புத்தாண்டைக் கொண்டாடவும் ரூர்க்கிக்குச் சென்றுள்ளார் ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட்டின் கார் விபத்துக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்களால் ரிஷப் பண்ட் காரில் கொள்ளையடிக்கபட்டதாக சில வதந்திகள் பரவின. இருப்பினும், விபத்தை நேரில் பார்த்த சிலர் இந்த கூற்றுக்களை மறுத்து, சாலையில் கிடந்த அனைத்து பணத்தையும் எடுத்து இந்திய கிரிக்கெட் வீரரிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைத்ததாகக் கூறியுள்ளனர்.

குறிப்பாக பண்ட்டை விபத்து பகுதியில் இருந்து காப்பாற்றிய பேருந்தின் ஓட்டுநர் சுஷில் குமார் மற்றும் நடத்துநர் பரம்ஜித் சிங் தான் முதலில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், பண்ட் ஒரு கிரிக்கெட் வீரர் என்று தங்களுக்கு தெரியாது என்றும், கிரிக்கெட் போட்டியை பார்த்தது இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும், “நாங்கள் மனித நேய அடிப்படையில் தான் எரிகின்ற காருக்குள் யாரேனும் இருக்கிறார்களாக? என்பதை அறிய பேருந்தை நிறுத்தினோம். காருக்குள் இருந்த பணப்பையில் எட்டு ஆயிரம் ரூபாய் இருந்து. அதை ஆம்புலன்ஸில் இருந்தவர்களிடம் ஒப்படைத்தோம்” என்றும் கூறியுள்ளனர்.

முன்னதாக விபத்து குறித்து பேசிய அவர்கள் “கார் டிவைடரில் மோதியதைக் கண்டேன், பண்ட் காயமடைந்தார், அவர் காரை விட்டு வெளியே வந்தார், பின்னர் நான் எனது பேருந்தை நிறுத்தி அவருக்கு அருகில் சென்று அவரை ஒரு அறையில் படுக்க வைத்தேன். பாதுகாப்பான இடத்தில் அமர வைத்து, எனது பேட் சீட்டால் போர்த்திய பின்னர் ஆம்புலன்சை அழைத்தேன்” என்றும் கூறினர்.

பானிபட் பேருந்து பணிமனையை சேர்ந்த ஓட்டுநர் சுஷில் குமார் மற்றும் நடத்துநர் பரம்ஜித்-க்கு சக ஊழியர்களும், நண்பர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், விபத்துக்குப் பிறகு ரிஷப் பண்டிற்கு உதவிய அவர்களை உத்தரகாண்ட் டிஜிபி கவுரவித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Rishabh pant accident rescued bus driver interview tamil news