Rishabh Pant – MS Dhoni – coach R Sridhar Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்த ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி -20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் மொஹாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், நாக்பூரில் நடந்த 2வது ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஆட்டம் நேற்றிரவு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிம் டேவிட் 54 ரன்களும், கேமரூன் கிரீன் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர்குமார், சாஹல் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 187 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் விராட் கோலி – சூர்யகுமார் யாதவ் ஜோடி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதங்களை விளாசிய இந்த ஜோடியில் சூர்யகுமார் யாதவ் 69 ரன்களிலும், விராட் கோலி 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவர்களில் களத்தில் இருந்த ஹர்திக் பாண்ட்யா – தினேஷ் கார்த்திக் ஜோடி ஒரு பந்தை மீதம் வைத்து இலக்கை எட்டிப்பிடித்தனர்.
இந்த ஜோடியில் தினேஷ் கார்த்திக் 1 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 25 (16) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 19.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ருசித்தது. மேலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் டி20 தொடரில் 2- 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பண்ட்

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்ரிக்க அணிகளுக்கு எதிராக நடந்து வரும் தொடர்களில் இந்திய அணி, எதிர்வரும் டி-20 உலக கோப்பை மனதில் கொண்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது. இந்த தொடருக்கு இந்திய நிர்வாகம் தேர்வு செய்துள்ள அணியில், தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் தினேஷ் கார்த்திக், ஒரு ஃபினிஷராக உருவெடுத்துள்ளதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்பை பண்ட் தவற விட்டு வருகிறார். இதனால் அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்திவதில் அதிக விருப்பம் காட்டி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரில் கூட, 3 போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கிற்கும், ஒரு போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு என வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
‘எதிர்காலத்தில் கேப்டனாகும் வாய்ப்பு உள்ளது’ – பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர்

கடந்த ஜூன் மாதத்தில் தென் ஆபிரிக்க மண்ணில் நடந்த தொடருக்கு பிறகு, ரிஷப் பண் டி-20 அணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவருக்கு எப்போதும் தனது ஆதரவை கொடுப்பவராக முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் இருந்து வருகிறார்.

தமிழகத்தை சேர்ந்த பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர், பண்ட் டி20 போட்டிகளில் ஆடவில்லை என்றாலும், ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும், தோனி போன்ற சூழலில் வளர்ந்த அவர் எதிர்காலத்தில் அணியின் கேப்டனாக வருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“மான்செஸ்டரில் அவர் என்ன செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். அவருக்கு திறமை இருக்கிறது. நான் அவரை நெருங்கிய இடங்களிலிருந்து பார்த்திருக்கிறேன். மேலும் தீவிரமான பெரிய விஷயங்கள் அவரது வழியில் உள்ளன என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அவரது கடந்தகால செயல்பாடுகளை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவருக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.

எவரும் தலைமைத்துவ திறமையுடன் பிறக்கவில்லை, எம்எஸ் தோனியும் அப்படி இல்லை. அவர் பெரியவர்கள் மற்றும் அவரை விட வயதான வீரர்களுடன் விளையாடினார். அதனால்தான் அவருக்கு அந்த கிரிக்கெட் புத்திசாலித்தனம் கிடைத்தது.
ரிஷபும் இதேபோன்ற சூழலில் வளர்ந்தவர் தான். பெரிய சாதனையாளர்களுடன் விளையாடி தனது புத்திசாலித்தனத்தை பட்டை தீட்டியுள்ளார். எதிர்காலத்தில் அவர் கேப்டனாக வருவார்.” என்று முன்னாள் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil