IPL 2024 | Rishabh Pant: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார். அந்த கோர விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சாலையில் இருந்த தடுப்பானில் கார் மோதிய விபத்தில் அவரது வலது முழங்காலில் தசைநார் கிழிந்து, நெற்றியில் இரண்டு வெட்டுக்கள் ஏற்பட்டன.
ரிஷப் பண்ட்டுக்கு மும்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அந்த தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார். பின்னர் அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மறுவாழ்வுக்கு உட்படுத்தப்பட்டார். மெல்ல மெல்ல பேட்டிங் செய்வதற்கு ஏற்ப அவர் உடற்தகுதி பெற்று வந்தார். அண்மையில் அவர் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியது.
இதனிடையே, ரிஷப் பண்ட் நடப்பு ஐ.பி.எல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவார் என அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வந்தது. மேலும், ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக களம் இறங்குவார், ஆனால் விக்கெட் கீப்பராக செயல்படுவது சந்தேகம் தான் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ரிஷப் பண்ட் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல் 2024) தொடரில் விளையாட முழு உடற்தகுதியுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது. மேலும், அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்படவும் அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டிசம்பர் 30, 2022 அன்று, உத்தரகாண்ட் மாநிலத்தின் ரூர்க்கிக்கு அருகில், உயிருக்கு ஆபத்தான சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, ரிஷப் பண்ட் 14 மாத மறுவாழ்வு மற்றும் மீட்பு செயல்முறை வழங்கப்பட்டது. இதற்குப் பிறகு, ரிஷப் பண்ட் இப்போது வரவிருக்கும் டாடா ஐ.பி.எல் 2024 தொடருக்கு விக்கெட் கீப்பர் பேட்டராக தகுதியாக உள்ளார் என அறிவிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளது.
அதேவேளையில், காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றம் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நடப்பு ஐ.பி.எல் சீசனில் விளையாடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.
நேற்று திங்கள்கிழமை, ரிஷப் பண்ட்-டின் ஐ.பி.எல் கம்பேக் தொடர்பாக பேசிய பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா, ரிஷப் பண்ட் சிறப்பான வகையில் விக்கெட் கீப்பராக பணியாற்றினால் டி20 உலகக் கோப்பைப்கான இந்திய அணியில் இடம்பெற பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 14 மாதங்கள் உடற்திறன் சார்ந்த பயிற்சியை மேற்கொண்டு வந்த ரிஷப் பண்ட் தற்போது முழு உடற்தகுதி பெற்று விட்டதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) March 12, 2024
Ahead of the #TATA @IPL 2024, the BCCI has issued the following medical and fitness updates for Rishabh Pant, Prasidh Krishna & Mohd. Shami.
Details 🔽 #TeamIndiahttps://t.co/VQDYeUnnqp
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.