ஒரு நல்ல வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டு உட்கார்ந்திருக்கிறது கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.
மொஹாலியில் 359 எனும் மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து, அதில் தோற்றது அதிர்ச்சி தந்தாலும் பேரதிர்ச்சி இல்லை. ஆனால், தோற்ற விதம் தான் நமக்கு கவலையளிக்கிறது.
ஸ்பின் ட்வின்ஸ்களான குல்தீப், சாஹல் ஜோடி போட்டு அடி வாங்கியது. அவர்கள் பந்துகளில் தப்பித்தவறி கிடைக்க வேண்டிய விக்கெட்டுகளும் தவறவிடப்பட்டன.
ஃபீல்டிங் தான் உண்மையில் மிக மிக கவலை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. இந்த ஃபீல்டிங் கட்டமைப்பை வைத்துக் கொண்டு, உலகக் கோப்பை நடைபெறவுள்ள இங்கிலாந்து போன்ற களங்களில் மட்டுமல்ல, Gully கிரிக்கெட்டில் கூட வெற்றிப் பெற முடியாது.
பேட்டிங் பயிற்சியை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டு பவுலிங், ஃபீல்டிங் பயிற்சி மட்டும் வீரர்களுக்கு அளித்தால் சிறப்பாக இருக்கும் போல... அதிலும் கேட்சுகளை தவறவிட்டுவிட்டு, வீரர்கள் சிரிப்பதை தான் சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லை.
ரிஷப் பண்ட்டை பொறுத்தவரை, விக்கெட் கீப்பிங்கில் அவர் முதலில் அ, ஆ பழக வேண்டும். நேற்று அவர் செய்த விக்கெட் கீப்பிங், ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. முக்கியமான தொடர்களில் இது போன்று தடுமாறிக் கொண்டிருந்தால் அது பார்க்க நன்றாக இருக்காது. இவரை எப்படி இந்திய அணி இவ்வளவு தூரம் நம்புகிறது என்பதில் சற்று ஆச்சர்யமே!
இருப்பினும், ரிஷப் பண்ட் திறமையற்றவர் அல்ல. பவர் ஹிட் இவரது பலம். சிக்ஸர்கள் அடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார். டி20க்கு ஏற்ற பேட் மொழி இவரது மதிப்பை உயர்த்துகிறது. ஆனால், விக்கெட் கீப்பிங் எனும் கூடுதல் பொறுப்பை கவனிக்கும் போது, அந்த பணியின் சீரியஸ்னஸை அவர் முதலில் உணர வேண்டும். இது அட்வைஸ் அல்ல... எதார்த்தம்.
ஆனால், அவர் நேற்று விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய போது, ரசிகர்கள் தோனி.... தோனி என்று முழங்கியது ஒரு வீரராக அவரை நிச்சயம் காயப்படுத்தி இருக்கும்.
ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் தடுமாறுகிறார் தான்.... தோனி கிரிக்கெட்டிற்கு வந்த புதிதில் செய்த விக்கெட் கீப்பிங்கை கம்பேர் செய்கையில், ஆம்! தடுமாறுகிறார் தான்... ஸ்டெம்பிங்கை அவர் தவற விட்டார் தான்.... நாம் தோற்க அதுவும் ஒரு முக்கிய காரணம் தான்.... மறுப்பதற்கு ஒன்றுமேயில்லை.
ஆனால், தவறு செய்துவிட்டோமே என்று அவர் வருந்தும் நேரத்தில், 'தோனி... தோனி' என்று ரசிகர்கள் அவர் கண் முன்னே முழங்கியது, ஒரு வீரராக அவரை எவ்வளவு பாதித்திருக்கும் என்பதை உணர முடிகிறது. ரிஷப் ஒரு matured Kid, பக்கா Professional Cricketer என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருந்தாலுமே, ரசிகர்களின் அந்த கோஷம் அவரை நிச்சயம் காயப்படுத்தியிருக்கும்.
வீரன் தவறு செய்து செய்தே போர் செய்யப் பழகுகிறான்.
தலைவன் தவறு செய்து செய்தே முடிவெடுக்க பழகுகிறான்.
குடி, தவறு செய்து செய்தே நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கிறான்
இது ரிஷப்பிற்கும் பொருந்தும்!.
தோனி நிச்சயம் இதை விரும்பியிருக்கமாட்டார்!
ஆனால், இதே சொதப்பல் கதை தொடர்ந்தால், ரசிகர்களும் விரும்பமாட்டார்கள் என்று ரிஷப் புரிந்து கொண்டால் நல்லது.