ஐ.பி.எல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், அந்த அணியில் இருந்து விடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 2018ல் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரிக்கி பாண்டிங், கிட்டத்தட்ட 7 சீசன்களாக டெல்லி அணியை வழிநடத்தி ஒரு சாம்பியன் பட்டத்தைக் கூட அவரால் வாங்கித் தர இயலவில்லை.
இந்த ஆண்டு நடந்த தொடரில் டெல்லி அணி ஆடிய 14 போட்டிகளில் ஏழு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அத்துடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கடைசி மூன்று சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனையடுத்து, ரிக்கி பாண்டிங் விடைபெறுவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட்-டும் தற்போது அணியை விட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இதுதொடர்பாக அணி நிர்வாகமோ அல்லது ரிஷப் பண்ட்டோ இதுவரை அதிகாரப்பூர்வ எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.
2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் இந்தாண்டின் இறுதியில் நடைபெற உள்ள நிலையில், டெல்லி அணி தக்கவைக்க விரும்பும் வீரர்களில் ஒருவராக ரிஷப் இருப்பார். அவர் அந்த அணியில் நீடிக்க விரும்பவில்லை என்றால், அணி நிர்வாகத்திடம் தன்னை தக்கவைக்க வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
ரிஷப் பண்ட் அப்படி கூறும்பட்சத்தில், அவர் மெகா ஏலத்தில் நுழைவார். அவரை இழுக்க மற்ற 9 அணிகளும் கடுமையாக போட்டி போடும். இந்த சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சி.எஸ்.கே) அவரை வாங்க நினைக்கும். ஆனால், மெகா ஏலத்தில் அவரை வாங்க நினைப்பது நிச்சயமற்றது. எனவே, அவரை கண்டிப்பாக வாங்க நினைத்தால் சென்னை அணி டிரேடு முறையில் வசப்படுத்த முயற்சிக்கலாம்.
ஐ.பி.எல் 2025-க்கு முன் ரிஷப் சி.எஸ்.கே-வில் சேர்வதற்கான வாய்ப்புகள் என்பதை அவருக்கு வழங்கப்படும் தொகையைப் பொறுத்து அமையும். அவருக்காக சென்னை அணி எத்தனை கோடிகள் வரை செலவு செய்ய முடியும் என்பதை அலசி ஆராய்வார்கள்.
2016ல் தனது ஐபிஎல் பயணத்தை டெல்லி கேப்பிட்டல்ஸுடன் (அப்போது டெல்லி டேர்டெவில்ஸ்) தொடங்கிய ரிஷப், 2017-ல் அந்த அணிக்காக அறிமுகமானார். அத்துடன் வழக்கமான ஆட்டக்காரராகவும் ஆனார். 2018ல் 684 ரன்களைக் குவித்த அவர் ஆரஞ்சு தொப்பியை வெல்வதைத் தவறவிட்டார். அவர் 14 போட்டிகளில் விளையாடி 684 ரன்களை எடுத்து, கேன் வில்லியம்சனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார். வில்லியம்சம் 17 போட்டிகளில் ஆடி 735 ரன்கள் எடுத்தார்
2020ல் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு தொடரில் இருந்து வெளியேறினார். அவர் முதல் பாதிக்குப் பிறகு திரும்பிய போதும் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிஷப் பண்ட்டே தனது பதவியில் தொடர்ந்தார். 2020ல் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த டெல்லி அணி, அதன்பிறகு இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெறவில்லை. 2021 லீக் சுற்று முடிவில் அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்து இருந்தாலும் டெல்லி அணி அடுத்த நடந்த தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற முடியவில்லை. அதுமுதல் டெல்லி அணி தற்போதுவரை அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை.
ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து பிரியும் பட்சத்தில் புதிய கேப்டனுக்கான தேடலை அந்த அணி நிர்வாகம் தொடங்கும். அதற்கு புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கும் சவுரவ் கங்குலி உதவுவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“