rishabh pant ms dhoni ind vs ban bcci - ஒவ்வொரு முறை ரிஷப் பண்ட் தோற்கும் போதும் தோனி... தோனி...! எதார்த்தத்தை உணர்த்திய முன்னாள் விக்கெட் கீப்பர்
சமீப காலங்களில் ஒவ்வொரு முறையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எதிர்கால நம்பிக்கை விக்கெட் கீப்பராக வலம் வரும் ரிஷப் பண்ட் தோற்கும் போதெல்லாம், சமூக தளங்களில் ஊடுருவும் ஒரே பெயர் மகேந்திர சிங் தோனி.
Advertisment
தோனி மீண்டும் அணிக்குள் வர வேண்டும்; தோனி மீண்டு வர வேண்டும், தல கம்பேக் போன்ற பதிவுகளை, ஹேஷ்டேக்குகளை நாம் காண முடியும்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்தியா வாங்கிய மோசமான அடிக்குப் பிறகு, மீண்டும் இந்த குரல்கள் எழுந்துள்ளது. குறிப்பாக ரிஷப் பண்ட்டின் சொதப்பலான ஆட்டத்தினால், ஓய்ந்திருக்கும் தோனியின் பெயர் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Advertisment
Advertisements
இதுகுறித்து பிசிசிஐக்கு நெருக்கமான தரப்பில் நம்மிடம் கூறுகையில், "இந்திய அணிக்கு மீண்டும் தோனி திரும்ப வேண்டுமெனில், அவர் கட்டாயமாக உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும். அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடாத வரை, அவர் இந்திய அணிக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்" என்றனர்.
ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் சஹே இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், "தோனி தினமும் JSCA ஸ்டேடியத்திற்கு வருகிறார். ஜிம் போகிறார். டென்னிஸ் ஆடுகிறார். ஆனால், இந்த சீசனில் அவர் உள்ளூர் போட்டிகளில் ஆட விரும்புகிறாரா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. அவர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டாரா என்பது எனக்கு தெரியாது. ரஞ்சிக் கோப்பையில் ஜார்கண்ட் அணிக்காக அவர் எப்போது ஆட விரும்பினாலும் அணியில் இணைந்து கொள்ளலாம்" என்றார்.
பிசிசிஐ தரப்பு நம்மிடம் பேசுகையில், "ஓய்வு பெறுவது என்பது அவரது விருப்பம். ஒரு வீரராக அவருக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், சர்வதேச கிரிக்கெட்டை அடைய அவர் உள்ளூர் கிரிக்கெட் பாதை வழியாகத் தான் வர முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொதப்பிய பண்ட்
ஐபிஎல்-ல் ஆக்ரோஷம் காட்டும் ரிஷப் பண்ட், சர்வதேச களங்களில் சொதப்புவது வாடிக்கையாகி வருகிறது. அதை அவர் ரசித்து செய்கிறாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில், பேட்டிங்கில் எந்த சாகசமும் செய்ய முடியாமல் போனது, விக்கெட் கீப்பிங்கின் போது சாஹல் ஓவரில் முஷ்பிகுர் ரஹீமுக்கு எல்பிடபிள்யூ அப்பீல் செய்யாமல் விட்டது, பிறகு கேப்டன் ரோஹித் ஒரு தவறான DRS எடுக்க காரணமாக இருந்தது என ரிஷப் அன்று செய்த தவறுகள் ஏராளம்.
ஆனால், இவை மட்டும் தான் அணி தோற்க ஒரே காரணி என்றால் நெவர். டாஸ் தோற்றதில் இருந்து க்ருனால் பாண்ட்யா சிக்ஸ் லைனில் முஷ்பிகுரின் கேட்ச்சை விட்டது வரை எல்லாமே சொதப்பல் தான்.
இதுகுறித்து முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் கிரண் மோரே இந்தியன் எக்ஸ்பிரஸிடல் பேசுகையில், "லைன் அன்ட் லென்த் கணிப்பதில் தோனி ஸ்மார்ட். ஆகையால், பந்து எப்படி வந்தாலும், அவரால் எளிதாக கணிக்க முடியும். DRS அறிமுகம் செய்த போது, தோனி ஏற்கனவே இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். ஆகையால், அதை எளிதாக கையாள்வதில் அவருக்கு அனுபவம் கைக்கொடுத்தது.
ரிஷப் பண்ட் அனுபவம் அற்றவர். அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். அணியில் நிலையான இடம் பிடிக்க அவர் கடுமையாக உழைக்கிறார். இந்தியா தோற்றதற்கு ரிஷப் பண்ட்டின் இரு தவறான DRS அணுகுமுறை மட்டும் காரணமில்லை. இந்தச் சூழ்நிலையில், அவரை சற்று தனியாக இருக்க விடுங்கள்" என்றார்.