Rishabh Pant | Kl Rahul: இந்திய மண்ணில் பரபரப்பாக நடந்து முடிந்த 17-வது ஐ.பி.எல். தொடரில், சென்னையில் அரங்கேறிய இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) பேட் கம்மின்ஸின் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை (எஸ்.ஆர்.எச்) 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் அரங்கேறிய இந்த தொடரில், மே 08 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 165 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ஐதராபாத் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 9.4 ஓவரிலே எட்டிப் பிடித்தது.
இந்தப் போட்டியில் லக்னோ அணி மோசமான தோல்வியைப் பெற்ற நிலையில், அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுலிடம் களத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தி கொந்தளித்து பேசியிருந்தார் லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. பலரும் லக்னோ உரிமையாளரை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் வீரரும், ஐ.பி.எல் தொடருக்கான டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனுமான ரிஷப் பண்ட்-டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து ரிஷப் பண்ட் பேசுகையில், "உண்மையில் அந்த சூழ்நிலையில் என்ன நடந்தது என்று எனக்குப் புரியவில்லை, அதைப் பார்க்கும்போது அப்படித் தான் தோன்றியது. ஆனால், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், அங்கே ஏதோ நடந்துள்ளது. நீங்கள் ஒரு போட்டியில் தோற்றால், வெளிப்படையாக நிறைய பேசப்படும்.
ஆனால் அந்த வீடியோ சித்தரிக்கப்பட்ட விதம் பற்றி எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் வீடியோவை நிகழ்நேரத்தில் பார்க்கவில்லை. இல்லையெனில், நான் உங்களுக்கு பதில் அளித்திருப்பேன். நான் கூட தினமும் திட்டு வாங்குவேன். ஆனால் நான் பிடிவாதமாக இருக்கிறேன்." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“