இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. புதன்கிழமையன்று மைதானம் இருக்கும் பகுதியில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து, மறுநாள் வியாழக்கிழமை 2-ம் நாளில் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய நியூசிலாந்து 402 ரன்கள் எடுத்தது. தற்போது 2வது இன்னிங்சில் ஆடி வரும் இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 49 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை விட 125 ரன்கள் பின்னிலையில் இருந்தது. இந்தியா தரப்பில் சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இந்த நிலையில், இன்று சனிக்கிழமை 4-ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. களத்தில் இருந்த சர்பராஸ் கான் அடுத்த வந்த ரிஷிப் பண்ட்டுடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதில் சர்பராஸ் கான் 133 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சர்பராஸ் கானுடன் ஜோடி அமைத்திருக்கும் ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து அசத்தினார்.
இருவரும் தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சூழலில், இந்திய அணி ஸ்கோர் விறுவிறுவென எகிறியது. நியூசிலாந்தை விட பின்னிலையில் இருந்த இந்தியாவை, இவர்களின் பார்ட்னர்ஷிப் முன்னேற செய்தது. இந்த ஜோடியில் பவுண்டரி, சிக்ஸர் என பட்டையைக் கிளப்பிய சர்பராஸ் கான் 195 பந்துகளில் 18 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 150 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதனையடுத்து, சர்பராஸ் விக்கெட்டுக்குப் பிறகு வந்த கே.எல் ராகுல் ஜோடி அமைத்தார் களத்தில் இருந்த பண்ட். இந்த தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. குறிப்பாக, அரைசதம் அடித்த பண்ட் சிக்கிய பந்துகளை எல்லாம் சிதறடித்துக் கொண்டிருந்தார். அவர் 90 ரன்னில் இருந்த போது, முட்டி போட்டு கிளப்பி விட்ட சிக்ஸர் சின்னசாமி மைதானத்தின் கூரையின் மீது அடித்து திரும்பி வந்தது. அந்த சிக்ஸரை பண்ட் 102 மீட்டருக்கு பறக்க விட்டு மிரட்டி இருந்தார். அவர் சதம் அடித்து அசத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 105 பந்துகளில் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 99 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
வில்லியம் ஓ ரூர்க்கே வீசிய 88.1-வது ஓவரில் பண்ட் போல்ட்-அவுட் ஆனார். அவரின் அவுட் பண்ட்டை மட்டுமல்லாது போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தான் அவுட் என்பதை அறிந்த பண்ட் சோகமாக பெவிலியனுக்கு நடந்து சென்றார். இப்படி 90 ரன்களில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்திருப்பது இது 7வது முறையாகும்.
இந்த நிலையில், 99 ரன்னுக்கும், 199 ரன்னுக்கு ஆட்டமிழந்த இந்திய வீரர்கள் குறித்து இங்குப் பார்க்கலாம். இந்தப் பட்டியலைப் பொறுத்தவரையில், அதிக முறை 90 ரன்களில் ஆட்டமிழந்த இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கர் (10) இருக்கிறார். அவருக்குப் பின் ரிஷப் பண்ட் (7) இருக்கிறார்.
வீரர் | ரன்கள் | பந்துகள் | பவுண்டரி | சிக்ஸர் | எதிரணி | மைதானம் | தேதி |
பி ராய் | 99 | - | - | - | ஆஸ்திரேலியா | டெல்லி | 12 டிசம்பர் 1959 |
எம்.எல் ஜெய்சிம்ஹா | 99 | - | 12 | - | பாகிஸ்தான் | கான்பூர் | 16 டிசம்பர் 1960 |
ஏஎல் வடேகர் | 99 | 146 | 12 | - | ஆஸ்திரேலியா | மெல்போர்ன் | 30 டிசம்பர் 1967 |
ஆர் எஃப் சுர்தி | 99 | - | - | - | நியூசிலாந்து | ஆக்லாந்து | 07 மார்ச் 1968 |
எம் அசாருதீன் | 199 | - | 16 | 1 | இலங்கை | கான்பூர் | 17 டிசம்பர் 1986 |
என்.எஸ் சித்து | 99 | 228 | 9 | 2 | இலங்கை | பெங்களூரு | 26 ஜனவரி 1994 |
எஸ்சி கங்குலி | 99 | 118 | 13 | - | இலங்கை | நாக்பூர் | 26 நவம்பர் 1997 |
எஸ்சி கங்குலி | 99 | 159 | 13 | - | இங்கிலாந்து | நாட்டிங்ஹாம் | 08 ஆகஸ்ட் 2002 |
வி சேவாக் | 99 | 101 | 15 | - | இலங்கை | கொழும்பு | 26 ஜூலை 2010 |
எம்எஸ் தோனி | 99 | 246 | 8 | 1 | இங்கிலாந்து | நாக்பூர் | 13 டிசம்பர் 2012 |
எம் விஜய் | 99 | 234 | 10 | 2 | ஆஸ்திரேலியா | அடிலெய்டு | 09 டிசம்பர் 2014 |
கேஎல் ராகுல் | 199 | 311 | 16 | 3 | இங்கிலாந்து | சென்னை | 16 டிசம்பர் 2016 |
ரிஷப் பண்ட் | 99 | 105 | 9 | 5 | நியூசிலாந்து | பெங்களூரு | 19 அக்டோபர் 2024 |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.