Rishabh Pant Records Against Australia: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு கிரிக்கெட் அணியை இந்திய வீரர்கள் இந்த அளவுக்கு ‘டாமினேட்’ செய்த வரலாறு இதற்கு முன்பு இல்லை. இறுதி டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் புஜாரா, ரிஷப் பாண்ட், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் விளாசல்களில் ‘கங்காரு’ குட்டிகள் கதறிவிட்டன.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் 2-1 என ஏற்கனவே முன்னிலையில் இருக்கிறது. 4-வது மற்றும் இறுதி டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றால்தான், இந்தத் தொடரை சமன் செய்யவாவது முடியும் என்கிற நிலை இருக்கிறது.
ஜனவரி 3-ம் தேதி முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 130 ரன்களுடனும், ஹனுமா விகாரி 39 ரன்களுடனும் களத்தில் நின்றனர். விகாரி மேலும் 3 ரன்கள் தன் பங்கிற்கு சேர்த்த நிலையில் கேட்ச் ஆனார். டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்தும், சர்ச்சைக்குரிய முறையில் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.
அப்போது எப்படியும் இந்திய அணியை 400 ரன்களுக்குள் சுருட்ட ஆஸ்திரேலியா நினைத்திருக்கும். ஆனால் அடுத்து வந்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் வாண வேடிக்கைகளை விட்டார். இரட்டை சதத்தை நோக்கி கம்பீரமாக முன்னேறிய புஜாரா, துரதிருஷ்டவசமாக 193 ரன்களில் நாதன் லயன் பந்தில் அவரிடமே கேட்ச் ஆனார்.
அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பாண்டுடன் இணைந்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சோதித்துவிட்டார். 114 பந்துகளில் 81 ரன்கள் குவித்த நிலையில் ஜடேஜா, நாதன் லயன் பந்துவீச்சில் கிளின் போல்ட் ஆனார். அத்துடன் ஆட்டம் டிக்ளேர் செய்யப்பட்டது. விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் 159 ரன்களுடன் இறுதி வரை களத்தில் நின்றார்.
பின்னர் 10 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்தது. இந்த டெஸ்ட் போட்டியை டிராவில் முடிக்கவே ஆஸ்திரேலியா போராடும் என எதிர்பார்க்கலாம்.
இதற்கிடையே ஆட்டத்தின் 2-வது நாளான இன்று அரங்கேறிய சாதனைகளை பார்க்கலாம்.
1. ரிஷப் பாண்ட் - ஜடேஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய மண்ணில் 7-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது.
2. சிட்னியில் அதிக முறை 600 ரன்களை கடந்த வெளிநாட்டு அணி என்கிற அரிய சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது. இந்திய அணி 3 முறை இங்கு 600 ரன்களை கடந்திருக்கிறது.
இங்கிலாந்து அணி 2 முறையும், மேற்கு இந்திய தீவு அணி ஒரு முறையும் கடந்திருக்கின்றன.
3. இன்று 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்தது, ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் 2-வது பெரிய ஸ்கோர் ஆகும். இதே சிட்னியில் 2004-ல் 7 விக்கெட் இழப்புக்கு 705 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் செய்தது. அதுவே இன்னும் சாதனையாக தொடர்கிறது.
வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் 5-வது பெரிய ஸ்கோர் இது (622/7).
4. கடந்த 10 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய அணி 500 ரன்களை தாண்டியதில்லை. எனவே 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மைல்கல் ஸ்கோர் இது.
இந்த வகையில் கடைசியாக 2009-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் நடந்த டெஸ்டில் 520 ரன்களை இந்தியா குவித்தது.
5. ரிஷப் பாண்ட் - ஜடேஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு சேர்த்த 204 ரன்கள், இந்தியா தரப்பில் 7-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட 6-வது பெரிய ஸ்கோர்.
6. வெளிநாட்டு மண்ணில் 7-வது விக்கெட்டுக்கு இந்திய ஜோடி எடுத்த 2-வது பெரிய ஸ்கோராக பாண்ட் - ஜடேஜா குவித்த 204 ரன்கள் பதிவாகியிருக்கிறது. மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிராக விவிஎஸ் லட்சுமண் - அஜய் ரத்ரா சேர்த்த 224 ரன்களே வெளிநாட்டு மண்ணில் 7-வது விக்கெட்டுக்கு இந்திய ஜோடியின் அதிகபட்ச ஸ்கோர்.
7. இந்த சதம் மூலமாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் சதம் அடித்த இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பர் என்கிற பெருமையை ரிஷப் பாண்ட் பெறுகிறார்.
8. இந்த டெஸ்டில் 159 ரன்கள் குவித்த பாண்ட், வெளிநாட்டு மண்ணில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் என்கிற சாதனையையும் டோனியிடம் இருந்து கைப்பற்றியிருக்கிறார். டோனி 148 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் இன்னிங்ஸில் 150 ரன்களை கடந்த இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பர் என்கிற சாதனையும் ரிஷப் பாண்ட் கைவசம் வந்திருக்கிறது.
9. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் சதம் அடித்த 2-வது வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்கிற பெருமையையும் ரிஷாப் பாண்ட் பெற்றிருக்கிறார். ஜெஃப்ரி துஜான் 1984-ல் மான்செஸ்டரிலும், பெர்த்திலும் சதம் அடித்து இந்த சாதனையை படைத்த முதல் விக்கெட் கீப்பர்!
10. டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பரின் 3-வது பெரிய ஸ்கோராக ரிஷாப் பாண்டின் 159 ரன்கள் பதிவானது. டோனியின் 224 ரன்களும், புதி குண்டேரன் எடுத்த 192 ரன்களும் இந்திய விக்கெட் கீப்பர்களின் முதல் இரண்டு பெரிய ஸ்கோர்களாக இருக்கின்றன.
11. ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு விக்கெட் கீப்பர் ஒருவர் எடுத்த 2-வது பெரிய ஸ்கோர் என்கிற பெருமையையும் ரிஷப் பாண்டின் 159 ரன்கள் பெற்றிருக்கிறது. 2012-ல் பெர்த் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் டீ வில்லியர்ஸ் எடுத்த 169 ரன்களே இந்த வகையில் சாதனையாக தொடர்கிறது.
12. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 3 இன்னிங்ஸ்களை டிக்ளேர் செய்த ஒரே அணி இந்தியாதான். அதுவும் 2 முறை இந்தச் சாதனையை இந்தியா படைத்திருக்கிறது.
2008-ல் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஒருமுறையும், தற்போதைய தொடரில் ஒரு முறையும் இது நடந்திருக்கிறது.
இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பாண்ட் இன்னும் பல சாதனைகளை இதுபோல படைப்பார் என எதிர்பார்க்கலாம்.