Yashasvi Jaiswal | Shubman Gill | IPL 2024: 2024 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் வருகிற ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஜூன் 5 ஆம் தேதி இந்தியா அதன் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 9 ஆம் தேதி அன்று நியூயார்க்கின் புறநகர் பகுதியில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தப் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
டி20 உலகக் கோப்பை - கில், ஜெய்ஸ்வால் இடத்துக்கு ஆபத்து
இந்நிலையில், இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏப்ரல் கடைசி வாரத்தில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அந்த இந்திய அணியில் யார் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும்? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது இடம் ஆபத்தான நிலையில் உள்ளது.
நடப்பு ஐ.பி.எல் சீசனில் இந்த இரு வீரர்களும் தங்களது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் 121 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் கடந்த சீசனில் 14 போட்டிகளில் 625 ரன்கள் எடுத்திருந்தார். இதேபோல், இளம் அதிரடி வீரரான சுப்மன் கில் 6 போட்டிகளில் 255 ரன்கள் தான் எடுத்துள்ளார். அவர் கடந்த சீசனில் 17 போட்டிகளில் 890 ரன்களை குவித்து இருந்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது இடத்திற்கு போட்டியாக ரியான் பராக், சிவம் துபே ஆகியோர் உருவெடுத்துள்ளனர். இந்த சீசனில் சிக்ஸர் மன்னனாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துபே, 6 போட்டிகளில் 15 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டியுள்ளார். அத்துடன் 60 சராசரியில் மற்றும் 163.51 ஸ்ட்ரைக் ரேட்டில் 242 ரன்களை எடுத்துள்ளார். இதேபோல், தனது மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக், இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 318 ரன்கள் எடுத்து, ஆரஞ்சு தொப்பி ரேஸில் 2வது இடத்தில் உள்ளார்.
கோலி மற்றும் ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினால், சிவம் துபேவுடன் இணைந்து ரியான் பராக் மிடில் ஆர்டரில் இடம் பெற வாய்ப்புள்ளது. அதனால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது இடத்திற்கு ஆபத்து வந்துள்ளது. அவர்கள் இருவரும் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடிப்பார்களாக என பொறுத்திருந்து பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“