இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் யுஸ்வேந்திர சாஹல். தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இவர் பிரபல பாடகியும் மாடலுமான தனஸ்ரீ வர்மாவை கடந்த 2020 டிசம்பரில் திருமணம் முடித்தனர்.
இதன் பின்னர் இருவரும் ரொமாண்டிக்கான பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதிப் படுத்தும் வகையில், சமீபத்தில் இருவரும் பரஸ்பரம் பிரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. சஹல் தரப்பிலும், தனஸ்ரீ வர்மா தரப்பிலும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Meet RJ Mahvash, the ‘mystery girl’ who attended Champions Trophy final with Yuzvendra Chahal
இந்நிலையில், துபாயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப் போட்டியை நேரில் கண்டு களித்துள்ளார் யுஸ்வேந்திர சாஹல். அப்போது அவருடன் இளம்பெண் ஒருவர் இருந்தார். தற்போது இருவரும் சிரித்து பேசி மகிழ்ந்த காட்சிகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த இளம்பெண் யார் என்பது குறித்த தேடல்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், யுஸ்வேந்திர சாஹலுடன் இந்தியா - நியூசிலாந்து மோதிய இறுதிப் போட்டியை நேரில் பார்த்து மகிழ்ந்த அந்த இளம்பெண் குறித்த தகவல் வெளிவந்துள்ளன. அவர் பெயர் ஆர்.ஜே. மஹ்வாஷ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஆர்.ஜே. மஹ்வாஷ்?
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் பிறந்தவர் மஹ்வாஷ். சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவராக வலம் வரும் இவர் அடிப்படையில் ஒரு ஆர்.ஜே. தற்போது வளர்ந்து வரும் நடிகையாகவும் இருக்கிறார். மேலும், புதிய அமேசான் மினி நிகழ்ச்சியில் தோன்ற உள்ளார்.
மஹ்வாஷ் உத்தரபிரதேசத்தின் அலிகாரில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். மஹ்வாஷ் ரேடியோ ஜாக்கியாகத் தொடங்கி ரேடியோ மிர்ச்சி 98.3 எஃப்எம்மில் பணியாற்றி வருகிறார். இந்தி பிக் பாஸ் 14 இல் பங்கேற்கும் வாய்ப்பை மஹ்வாஷ் நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா - நியூசிலாந்து போட்டியில் ஆர்.ஜே. மஹ்வாஷ் சாஹலுடன் காணப்பட்ட அவர், தொடர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டார். அதன் கேப்சனில், (இந்தியா வெற்றி பெற உதவிய பிறகு நான் திரும்பி வருவேன் என்று சொன்னேன். நான் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் மிக்கவர்).” என்று பதிவிட்டு இருந்தார்.
முன்னதாக, 2024 கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, மஹ்வாஷ் சாஹல் மற்றும் இன்னும் சிலருடன் இணைந்த படங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் சாஹலை டேட்டிங் செய்வதாக வதந்திகள் எழுந்தன. அதனை பகிரங்கமாக மறுத்த அவர், அவை "ஆதாரமற்றது" என்றும், தனது தனியுரிமையை மதிக்கவும், போலி செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் ரசிகர்களை அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், மஹ்வாஷ், "சில கட்டுரைகள் மற்றும் ஊகங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் எவ்வளவு ஆதாரமற்றவை என்பதைப் பார்ப்பது உண்மையில் வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடன் காணப்பட்டால், நீங்கள் அவருடன் டேட்டிங் செய்கிறீர்கள் என்று அர்த்தமா? மன்னிக்கவும், இது எந்த ஆண்டு? மற்றவர்களின் படங்களை மறைக்க எந்த பி.ஆர் குழுக்களும் என் பெயரை இழுக்க நான் அனுமதிக்க மாட்டேன். கடினமான காலங்களில் மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழட்டும்." என்று அவர் தெரிவித்தார்.