Coimbatore's brother-sister haul gold medals in Rocketathlon Championship Tamil News: ஆஸ்திரியாவில் நடந்த சர்வதேச அளவிலான ராக்கெத்லான் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் - தங்கை - தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
2022 ஆண்டுக்கான டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ், லான் டென்னிஸ் மற்றும் இறகுபந்து ஆகிய நான்கு விளையாட்டுகளையும் உள்ளடக்கிய 'ராக்கெத்லான்' சம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில், நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி சார்பாக கோவை சூலூர் பகுதியை சேர்ந்த எம்.டி.என். பியூச்சர் எனகிற தனியார் பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் ஆதித் மற்றும் தங்கை ஆதிரை ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர்.
இதே போல் கோவையை சேர்ந்த ஆதர்ஷ் என்ற மாணவன் உட்பட சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்ட இப்போட்டிகளில், கோவை சூலூர் வீராங்கனை ஆதிரை 16 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார்.
இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில்,அதே பள்ளியில் பயிலும் இவரது அண்ணன் ஆதித், தங்கை ஆதிரையுடன் ஜோடியாக விளையாடி ஒரு தங்கம் மற்றும் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில், ஆதிரை மற்றும் ஆதர்ஷ் ஜோடி ஒரு தங்கம் என தங்கப்பதக்கங்கள் வென்றனர்.
இந்திய அணி சார்பாக மொத்தம் ஒன்பது வீரர்கள் கலந்து கொண்ட இதில் தமிழகத்தை சேர்ந்த குறிப்பாக கோவையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்,தங்கை வென்ற நிலையில் கோவை விமான நிலையம் வந்த ஆதித் மற்றும் ஆதிரை ஆகியோருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் கடின பயிற்சி மற்றும் முயற்சியின் காரணமாக இந்த இலக்கை அடைய முடிந்ததாகவும் குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்,தங்கை வென்று சர்வதேச அளவில் கோவைக்கு பெருமை சேர்த்துள்ளது என பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.