ஆஸ்திரேலியா பெர்த் நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஹாப்மன் கப் டென்னிஸ் தொடர் கடந்த டிசம்பர் 29-ம் தேதி தொடங்கியது. 8 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இந்த ஹாப்மான் தொடரில் பங்கேற்பார்கள். ஒவ்வொரு அணியிலும் அந்த நாட்டின் சிறந்த ஆண் போட்டியாளரும், பெண் போட்டியாளரும் இத்தொடருக்குத் தகுதிபெறுவர். இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் போட்டியிடும்.
ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகள் ‘ஏ’ பிரிவிலும், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, க்ரீஸ், கிரேட் பிரிட்டன் அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் பெண்களுக்கான ஒற்றையர், ஆண்களுக்கான ஒற்றையர், கலப்பு இரட்டையர் என மூன்று போட்டிகளில் விளையாடும். முதலிடத்தைப் பிடிக்கும் அணி, ஃபைனலுக்கு முன்னேறும்.
இந்த முறை, ஒரே பிரிவில் இடம்பிடித்திருந்த சுவிட்சர்லாந்து, அமெரிக்க அணிகள், கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று மோதின. நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்து அணிக்கு விளையாடும் ரோஜர் ஃபெடரர், பெலினா பென்சிக் , அமெரிக்கா அணியில் செரினா வில்லியம்ஸ், ப்ரான்சிஸ் டியாஃபோ ஆகியோரும் நேருக்கு நேர் மோதினர்.
டென்னிஸ் வரலாற்றில் முதல் முறையாக, ஃபெடரரும், செரீனாவும் கலப்பு இரட்டையர் போட்டியில் மோதிக்கொள்வது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இரு பெரும் உச்ச நட்சத்திரங்கள் மோதும் ஆட்டம் என்பதால், அரங்கம் முழுவதும் 14,000 ரசிகர்கள் நிறைந்திருந்தனர். இப்போட்டியில் 4-2 4-3(3) என்ற கணக்கில் ஃபெடரர் இணை, செரீனா இணையை வென்று அசத்தியது.
இப்போட்டி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செரீனா, "எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஆட்டம் இது. டென்னிஸ் மூலம் நம்மை மெய்சிலிர்க்க வைத்தவருக்கு எதிராக விளையாடுவது என்பது அற்புதமான நிகழ்வு. அடிக்கடி இதுபோன்று நடக்காது. ஆட்டத்தின் போது நான் பதட்டமாகவே உணர்ந்தேன். இனி இதுபோன்றதொரு ஆட்டம் நடக்க வாய்ப்பேயில்லை" என்றார்.
ஆட்டத்தின் போது ஃபெடரரும், செரீனாவும் எடுத்துக் கொண்ட செல்ஃபி ரசிகர்கள் மத்தியில் இப்போது செம வைரல்.