டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரருக்கு, அமெரிக்காவில் உள்ள டார்ட்மவுத் கல்லூரி கவுரவ டாக்டர் பட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கியது. இதற்கு நன்றி தெரிவித்து அக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஃபெடரர் உரையாற்றினார். அப்போது அவர், தான் எளிமையாக விளையாடுதை காட்ட, மிவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது என்றும், "முயற்சியின்றி" எனக் குறிப்பிடப்படும் வார்த்தை ஒரு கட்டுக்கதை என்றும், திறமையால் மட்டுமல்ல, பல வருட கடின உழைப்பால் தான் இந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
42 வயதான ரோஜர் ஃபெடரருக்கு, அவரது மனிதநேயப் பணிக்காக டாக்டர் ஆஃப் ஹ்யூமன் லெட்டர்ஸ் கவுரவ பட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஃபெடரர், தனது மறக்க முடியாத மற்றும் எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பாடங்களை விவரித்தார்.
"'முயற்சியின்றி' (Effortless), அந்த வார்த்தையை அதிகம் கேட்டவன் என்ற முறையில் நான் இதைச் சொல்கிறேன். எனது ஆட்டம் முயற்சியின்றி, மிகவும் எளிமையாக இருந்ததாக பலரும் சொல்வார்கள். பெரும்பாலான நேரங்களில் என்னை பாராட்டும் விதமாக அப்படி சொல்வார்கள். 'அவருக்கு அரிதாகவே வியர்த்துள்ளது!' என்றும் கூறுவார்கள். அப்படி அவர்கள் சொல்லும் போது, அது எனக்கு வெறுப்பாகத் தான் இருக்கும்.
உண்மை என்னவென்றால், அப்படி எளிமையாக விளையாடியது போல் காட்டிக் கொள்ள நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அதற்காக நான் பல வருடங்கள் புலம்பினேன். சத்தியமாக சொல்கிறேன், பல நேரங்களில் எனது டென்னிஸ் பேட்டை தூக்கி எரிந்துள்ளேன். அதன் பிறகு தான் நான் எப்படி கூலாக ஆட வேண்டும் எனபதை கற்றுக் கொண்டேன். என்னுடைய திறமையால் மட்டும் நான் இந்த இடத்தை அடையவில்லை. எனது எதிரிகளை முறியடிக்க முயற்சிப்பதன் மூலம் நான் இங்கு வந்தேன்."
நீங்கள் நினைத்ததை விட கடினமாக உழைக்கலாம். அப்படி இருந்தும் நீங்கள் தோல்வி அடையலாம். அது போலத் தான் நானும் தோல்வி அடைந்தேன். நான் 2008 விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ரஃபேல் நடாலிடம் தோல்வியுற்றேன். என் நம்பர் ஒன் தரவரிசையை இழந்தேன். ஆனால் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். அதனால், தொடர்ந்து உழையுங்கள். தொடர்ந்து போட்டியிடுங்கள்.
நான் நிறைய உழைத்தேன், நிறைய கற்றுக்கொண்டேன், அந்த சிறிய இடத்தில் (டென்னிஸ் கோர்ட்) நிறைய மைல்கள் ஓடினேன்... ஆனால் உலகம் அதைவிடப் பெரியது.
நான் முதல் 5 இடத்தில் இருந்தபோதும், எனக்கு வாழ்க்கை முக்கியம் என்று நினைத்தேன். பயணம், கலாச்சாரம், நட்பு மற்றும் குறிப்பாக குடும்பத்தினருடன் நேரம் கழிப்பது போன்றவை முக்கியம் என்று கருதினேன். என் வேர்களை நான் ஒருபோதும் கைவிடவில்லை, நான் நான் எங்கிருந்து வந்தேன் என்பதை ஒருபோதும் மறக்கவில்லை." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“