இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சமீப காலமாக ரன் எடுக்க போராடி வருகிறார். சொந்த மண்ணிலும், வெளிநாட்டிலும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறி பெரும் அதிர்ச்சியை அளித்து வருகிறார். அவர் கடைசியாக ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு இன்னிங்ஸில் மட்டுமே அரைசதம் அடித்திருந்தார்.
கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகளில் 3, 9, 10, 3, 6 என சொற்ப ரன்களில் வெளியேறினார். இந்த தடுமாற்றம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித்தை கழற்றி விட்டது இந்திய அணி நிர்வாகம். அந்தப் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.
கேப்டன் ரோகித் மட்டுமல்லாது ஆஸ்திரேலிய தொடரில் முன்னணி வீரர்களான கோலி, கில் போன்ற வீரர்களும் ரன் எடுப்பதில் தடுமாறினர். இதனைக் கருத்தில் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ இந்திய அணி வீரர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டது. அதில், வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் பலரும் தற்போது உள்நாட்டில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை போட்டியில் தங்களது மாநில அணிக்காக ஆடி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மும்பை அணிக்காக ஆடி வருகிறார். கடந்த வாரத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களுக்கான இந்திய அணியை அறிவித்த போது ரோகித் ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பைக்காக ஆட இருப்பதாக வெளிப்படுத்தி இருந்தார்.
அதன்படி, ரோகித் சர்மா 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 10 ஆண்டுக்குப் பின் தனது முதல் ரஞ்சி போட்டியில் விளையாடினார். மும்பை - ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதும் ஆட்டம் மும்பையில் உள்ள சரத் பவார் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடந்து வரும் நிலையில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரஹானே பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் களமாடினர். சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட இந்த ஜோடியை வெறும் 28 நிமிடத்திலே உடைத்தார் ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் உமர் நசீர். அவரின் பந்தை புல் ஷாட் ஆட அரை மனதுடன் ரோகித் முயற்சித்து 3 ரன்னுக்கு அவுட் ஆகி நடையைக் கட்டினார் ரோகித். அவருடன் ஜோடி அமைத்த ஜெய்ஸ்வால் 4 ரன்னுக்கு அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
இதேபோல், பஞ்சாப் அணியை இந்திய வீரர் சுப்மன் கில் வழிநடத்தி வரும் நிலையில், அந்த அணி அதன் முதல் இன்னிங்சில் 55 ரன்னில் கர்நாடகாவிடம் ஆல்-அவுட் ஆகியது. கேப்டன் கில் 4 ரன்னுக்கு அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். டெல்லி அணிக்காக ஆடி வரும் ரிஷப் பண்ட் வெறும் 1 ரன்னுக்கு அவுட் ஆகி பெரும் அதிர்ச்சி கொடுத்தார். இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இப்படி சொற்ப ரன்னுக்கு அவுட் ஆகி வருவதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.