'நீண்ட காலத்துக்குப் பிறகு எங்களது மோசமான பேட்டிங்!' - மனம் திறக்கும் கேப்டன் ரோஹித்

'என்ன தவறு நடந்தது என்று எங்களுக்கு புரிகிறது'

ஹாமில்டனில் இன்று நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், 212 பந்துகள் மீதம் வைத்து, இந்தியாவுக்கு மெகா தோல்வியை பதிலடியாக கொடுத்திருக்கிறது நியூசிலாந்து அணி.

முதலில் பேட்டிங் செய்த ரோஹித் தலைமையிலான இந்திய அணி, போல்ட்டின் ஸ்விங் அட்டாக்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முடிவில், 30.5 ஓவர்களை சந்தித்து 92 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 14.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வென்றது.

தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா வெளிப்படையாக சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “நீண்ட காலத்துக்குப் பிறகு இந்திய அணியின் மோசமான பேட்டிங் இது. நியூஸிலாந்து பவுலர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிட்ச் உள்ளிட்டவை கடினமாக இருக்கும் போது ஒரு பேட்டிங் யூனிட்டாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நிதானமாக ஆடியிருக்க வேண்டும், ஆனால் அதைச் செய்யத் தவறினோம். இது மோசமான பிட்ச் அல்ல, கொஞ்சம் நிதானமாக ஆடியிருந்தால் பேட் செய்வதற்கு நல்ல பிட்ச்தான். நாங்கள் முனைப்புடன் ஆடவில்லை என்பதே உண்மை. சில மோசமான ஷாட்ஸ் ஆடினோம். பந்துகள் ஸ்விங் ஆகும்போது எப்போதுமே சவால் தான். எங்களுக்கு மட்டுமல்ல ஸ்விங் ஆகும்போது எந்த அணியுமே திணறவே செய்யும். பந்துகள் ஸ்விங் ஆகும் தருணங்கள் எப்போது அமையும், அதனை எப்படிக் கையாள்வது என்பதில் திட்டமிடல் முக்கியம். நாட்டுக்காக ஆடும் போது, எந்தளவிற்கு சிறப்பாக ஆட முடியுமோ, அவ்வளவு சிறப்பாக ஆட வேண்டும்.

என்ன தவறு நடந்தது என்று எங்களுக்கு புரிகிறது. தொடரை வென்று விட்டோம் என்பதற்காக ரிலாக்ஸாக ஆடக் கூடாது. தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும். நல்ல அணிகள் அதைத்தான் செய்யும். வெலிங்டன் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், “இப்படியொரு ஸ்விங் களத்தை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இப்படியொரு சவாலான களம் கிடைத்ததால் தான் எங்களால் இந்தியாவை கட்டுப்படுத்த முடிந்தது. அதுவும், 90 ரன்களுக்குள் சுருட்டியது எங்கள் பவுலர்களின் அபார திறமைக்கு கிடைத்த பரிசு. உலகின் தலைசிறந்த அணிக்கு எதிராக எங்களது சிறந்த ஆட்டம், அதனால் கிடைத்த சிறந்த முன்னேற்றம்” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close