இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி, நேற்று ராஜ்கோட்டில் (நவ.7) நடைபெற்றது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு, வங்கதேசத்தை வச்சு செய்தது ரோஹித் தலைமையிலான இந்திய அணி.
இதில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா 43 பந்துகளில் 85 ரன்கள் விளாசினார். இதில், 6 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். இதனால், 15.4 ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 154 ரன்கள் எடுத்து வென்றது.
இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், 1-1 என்ற கணக்கில் சமன் ஆகியுள்ளது. வரும் ஞாயிறன்று, இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
நேற்றைய போட்டியில், வங்கதேச பேட்டிங்கின் போது, சாஹல் வீசிய 13வது ஓவரில், ரிஷப் பண்ட்டால் சவுமியா சர்கார் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். முடிவு தேர்ட் அம்பயருக்கு கொண்டுச் செல்லப்பட, அது அவுட் என்று தெரிந்தது.
ஆனால், டிவி ஸ்க்ரீனில் நாட் அவுட் என்று அறிவிக்கப்பட, ஒரு நொடி மைதானத்தில் இருந்த அம்பயர் கூட அதிர்ச்சியாகிவிட்டார்.
எப்போதும் கூலாக இருக்கும் கேப்டன் ரோஹித்தும் டென்ஷனாக, ஸ்க்ரீனை நோக்கி கையை நீட்டியே திட்டிவிட்டார்.
அதன்பிறகு, உடனடியாக தவறு திருத்தப்பட்டு 'அவுட்' கொடுக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.