9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
சர்ச்சை மேல் சர்ச்சை
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறாது என பி.சி.சி.ஐ தெரிவித்ததாக கூறப்படுகிறது. வழக்கமாக போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் அந்த அந்த அணி வீரர்கள் அணியும் ஜெர்சியில் இடம் பெற்றிருக்கும். ஆனால், துபாயில் ஆடும் இந்திய அணி வீரர்களின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தானில் நடக்கும் தொடக்க விழா மற்றும் அதற்கு முன்பு நடைபெறவுள்ள கேப்டன்களின் போட்டோஷூட் போன்ற நிகழ்வுகளுக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ மறுத்ததாக கூறப்படுகிறது.
பி.சி.சி.ஐ ஐ.சி.சி-யிடம் இரண்டு போட்டிகளுக்கு முந்தைய நிகழ்வுகளையும் துபாய்க்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் கேப்டன் ரோகித் இந்த நிகழ்வுகளில் நேரடியாக பங்கேற்க முடியும் என்று தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ-யின் இந்த நடவடிக்கை பாகிஸ்தான் வாரியத்தை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. "பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை திட்டமிட வேண்டாம் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஐ.சி.சி ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது, எனவே இவை சிறிய பிரச்சினைகள்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பி.சி.பி) கூறியுள்ளனர்.